இலங்கை

கனிய மணல் அகழ்வு, காற்றாலை திட்டம் பூநகரி- கிராஞ்சியில் நாளை பாரிய எதிர்ப்புப் போராட்டம்

பூநகரி-கிராஞ்சியில் மக்களுடைய வாழ்வாதாரத்தை அழித்து முன்னெடுக்கப்படுகின்ற கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை திட்டங்களுக்கு எதிராக நாளை வியாழக்கிழமை கிராம மக்கள் மற்றும் பொதுஅமைப்புக்கள் ஒன்று கூடி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தவுள்ளனர். இந்நிலையில், குறித்த போராட்டம் தொடர்பில் கிராஞ்சி, வேரவில் ,வலைப்பாடு ஒன்றுபட்ட மக்கள் அமைப்பின் பிரதிநிதி ஜெயச்சித்ரா கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் காற்றாலை, கனிம மணல் அகழ்வு போன்ற திட்டங்களினால் மக்களுடைய வாழ்வாதாரம் மற்றும் மண்வளம் அபகரிக்கப்பட்டு வருகின்றது, இச்செயற்பாடு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

கடந்த கால அரசாங்கங்கள் செய்ததையே இந்த அரசாங்கமும் செய்கின்றது, கடந்த கால அரசாங்கங்கள் இனங்கண்ட இடங்களில் தான் கனிம மண் அகழ்வு, காற்றாலை திட்டம் போன்றவற்றை இந்த அரசாங்கமும் முன்னெடுத்துச் செல்கின்றது.

இவ்வாறான திட்டங்களினால் மக்கள் வெகுவாக பாதிப்படைகின்றனர். இவ்வாறான அபிவிருத்தி திட்டங்கள் மக்களுடைய வாழ்வாதாரத்தையும், குடியேற்றத்தையும் பாதிக்காத வகையில் அமைய வேண்டும், ஆனால் இங்கு அவ்வாறு இல்லை. கிட்டத்தட்ட கிராஞ்சிப் பகுதியில் 8000 தென்னம்பிள்ளைகளை அழித்து ஒரு அபிவிருத்தி நடக்கின்றது. அவ்வாறான ஒரு அபிவிருத்தி எமக்கு தேவையில்லை.

கிராஞ்சி மக்கள் தென்னம்பிள்ளைகளை வாழ்வாதாரமாகக் கொண்டு இருக்கின்றார்கள்.அவ்வாறு 2000 குடும்பங்கள் தென்னம்பிள்ளைகளை வாழ்வாதாரமாக நம்பி அங்கு வாழ்ந்து கொண்டிருக்கையில், அரசு அவற்றை அழித்து இவ்வாறான ஒரு அபிவிருத்தியைக் கொண்டு வருவதை மக்கள் ஏற்கமாட்டோம்.மக்களினுடைய வளம், நிலம் சுரண்டப்படுவதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அண்மையில் கடற்தொழில் அமைச்சர் கிராஞ்சி ஊடாக சென்றபோது கிராம மக்கள் 50 பேர் கூடி அவரை வழிமறித்து எமது பிரச்சனைகள் தொடர்பாக அவருக்கு எடுத்துக்காட்டி இருந்தோம். ஆனால் அமைச்சரால் அதற்கு சாதகமான பதில் எதுவும் கூறப்படவில்லை. எமக்கான மரியாதையைக் கூட அமைச்சர் அந்த நேரத்தில் தரவில்லை. வாகனத்தில் இருந்தவாறே நாம் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்துவிட்டு கடந்து சென்றிருந்தார். ஒரு மக்கள் பிரதிநிதி இவ்வாறு நடந்துகொள்வதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே, இவ்வாறான செயல்பாடுகளையும், எமது கிராமத்தினுடைய வளத்தையும், வாழ்வாதாரத்தையும் பேணிப் பாதுகாக்கும் முகமாக எதிர்வரும் 28ஆம் திகதி வியாழக்கிழமை மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை கிராமத்தில் முன்னெடுக்கவுள்ளோம். அந்த போராட்டத்தில் சகலரும் அரசியல், இன, மத மற்றும் பேதங்கள் கடந்து, தமிழ் மக்களின் இருப்புக்களைத் தக்கவைக்க ஒன்றிணையுமாறும் அவர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button