முச்சந்தி

இஸ்ரேலிய தூதரை நிராகரித்த குரோசியா: காசா போருக்கு எதிரான பால்கன் தேசம் !… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(குரோசிய ஜனாதிபதியின் கருத்து காசா போருக்கான உலகளாவிய எதிர்ப்பில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. மேற்கத்திய நாடுகளின் வழக்கமான அரசியல் மொழியிலிருந்து விலகி, அவர் வெளிப்படையாக இஸ்ரேலின் நடவடிக்கைகளை விமர்சித்துள்ளார்.
சில ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலுக்கு முழுமையான ஆதரவைத் தொடரும் நிலையில், மற்ற நாடுகள் மனித உரிமை மற்றும் சர்வதேச சட்ட அடிப்படையில் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றன)
 
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் காசா போர் உலக அரசியலின் முக்கியமான விடயமாக இன்னமும் தொடர்கிறது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய கூட்டணிகளின் ஆதரவுடன் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பல நாடுகள் அதற்கு எதிராக தங்களது அரசியல் மற்றும் மனிதாபிமான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், பால்கன் (Balkan) பிராந்தியத்தைச் சேர்ந்த சிறிய ஐரோப்பிய நாடான குரோசியா அண்மைக் காலத்தில் கவனிக்கத்தக்க அரசியல் குரலாக உருவெடுத்துள்ளது.
கிழக்கு ஐரோப்பாவில் சோரான் மிலானோவிச் (Zoran Milanović) தலைமையிலான குரோசியா ( Croatia ) அரசியல் வட்டாரத்தில் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. காசா போரில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்த ஜனாதிபதி மிலானோவிச், புதிய இஸ்ரேலிய தூதரின் நியமனத்தை நிராகரித்துள்ளார். இது சாதாரண இராஜதந்திர முரண்பாடு அல்ல. மாறாக, காசா போரின் பின்னணியில் ஐரோப்பிய அரசியலில் உருவாகி வரும் கருத்து வேறுபாடுகளின் வெளிப்பாடாக இது பார்க்கப்படுகிறது.
குரோசியாவின் தற்போதைய அரசியல் சூழல், குறிப்பாக ஜனாதிபதி சோரான் மிலானோவிச் அவர்களின் கருத்துகள், காசா போருக்கான உலகளாவிய எதிர்ப்பில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளன. மேற்கத்திய நாடுகளின் வழக்கமான அரசியல் மொழியிலிருந்து விலகி, அவர் வெளிப்படையாக இஸ்ரேலின் நடவடிக்கைகளை விமர்சித்துள்ளார். மனித உரிமைகள், சர்வதேச சட்டம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு ஆகியவை அரசியலின் மையமாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தில் ஜனாதிபதி மிலானோவிச் கூறியதாவது, புதிய தூதரின் பெயரை அதிகாரப்பூர்வ ஒப்புதல் கிடைக்கும் முன்பே இஸ்ரேல் அறிவித்தது “எழுதப்படாத இராஜதந்திர விதிமுறையை” மீறுவதாகும். பொதுவாக, எந்த நாட்டும் தனது புதிய தூதரை அறிவிப்பதற்கு முன், அந்த நாட்டு அரசின் மறைமுக ஒப்புதலைப் பெறுவது சர்வதேச இராஜதந்திர மரபாகக் கருதப்படுகிறது.
ஆனால் இந்த விவகாரம் வெறும் நடைமுறை மீறலாக மட்டும் இல்லை. காசா போரில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறித்து மிலானோவிச் முன்பே கடுமையான கருத்துகளை வெளியிட்டிருந்தார். அவர், பாலஸ்தீன பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மனிதாபிமான நெறிமுறைகளுக்கு எதிரானவை என்றும், மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை விமர்சிக்கத் தயங்குகின்றன என்றும் கூறியிருந்தார்.
குரோசியா இனமோதல்:
முன்னாள் யூகோஸ்லாவிய குடியரசான குரோசியா வரலாற்றாகவே போர், இனஅழிப்பு மற்றும் அகதிப் பிரச்சினைகளை அனுபவித்த நாடாகும். 1990களில் முன்னாள் யூகோஸ்லாவியாவின் சிதைவுக்குப் பின்னர் ஏற்பட்ட பால்கன் போர்கள், அந்த நாட்டின் அரசியல் நினைவகத்தில் இன்னும் ஆழமாக பதிந்துள்ளன. பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், நகரங்களின் அழிவுகள், அகதி முகாம்கள் போன்ற அனுபவங்கள் குரோசிய மக்களிடம் போரின் விலையை நன்கு உணர வைத்துள்ளன. இதனால் தான் காசாவில் நடைபெறும் மனிதாபிமான நெருக்கடியைப் பற்றிய அக்கறை அந்நாட்டில் அதிகமாக வெளிப்படுகிறது.
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு உருவான யூகோஸ்லாவியா, பல இனங்களையும் மொழிகளையும் கொண்ட கூட்டாட்சி நாடாக இருந்தது. இதில் செர்பியர்கள், குரோசியர்கள், போஸ்னியர்கள், ஸ்லோவேனியர்கள் உள்ளிட்ட பல இனத்தவர்கள் இணைந்து வாழ்ந்தனர். ஆனால் கம்யூனிச ஆட்சியின் வீழ்ச்சியுடன் தேசியவாத அரசியல் தீவிரமடைந்தது.
1991ஆம் ஆண்டு குரோசியா சுதந்திரம் அறிவித்தபோது, அந்நாட்டில் வாழ்ந்த

Screenshot

செர்பிய இன மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு ஆதரவாக செர்பியா அரசியல் மற்றும் இராணுவ ஆதரவை வழங்கியது. இதுவே ஆயுத மோதலாக மாறியது.

1991 முதல் 1995 வரை நீடித்த இந்தப் போர் குரோசிய இராணுவத்துக்கும் செர்பிய ஆதரவு பெற்ற படைகளுக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடந்தன. இந்த மோதல்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்தனர். பல நகரங்கள் அழிக்கப்பட்டன. குறிப்பாக வுகோவார் (Vukovar) நகரம் கடுமையாக சேதமடைந்தது. அத்துடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர். இன அடிப்படையிலான வெளியேற்றங்கள் இடம்பெற்றன. இந்தப் போர் வெறும் நிலப்பிரச்சினை அல்ல. அது தேசிய அடையாளம், மத வேறுபாடு, வரலாற்றுக் காயங்கள் மற்றும் அரசியல் ஆதிக்கப் போட்டிகளின் வெளிப்பாடாக இருந்தது.
2023இல் இருந்து காசா பகுதியில் மருத்துவமனைகள், பாடசாலைகள் மற்றும் அகதி முகாம்கள் மீது தாக்குதல்கள் நடைபெறுவதாக வெளிவரும் தகவல்கள் உலக மனசாட்சியை உலுக்கியுள்ளன. ஆயிரக்கணக்கான குழந்தைகள் மற்றும் பெண்கள் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கின்றன. இந்த சூழலில், குரோசிய அரசியல் வட்டாரங்களில் இருந்து எழும் விமர்சனங்கள், “பாதுகாப்பு” என்ற பெயரில் பொதுமக்கள் மீது அளவுக்கு மீறிய இராணுவ வன்முறை நடத்தப்படக்கூடாது என்ற கோணத்தில் அமைந்துள்ளன.
பால்கன் நாடுகளின் அரசியல் நிலைப்பாடுகள் பெரும்பாலும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ கூட்டணிகளின் தாக்கத்துக்குள் அமைகின்றன. ஆனால் குரோசியாவின் சில அரசியல் குரல்கள், மேற்கத்திய இரட்டை நிலைப்பாடுகளை கேள்விக்குட்படுத்துகின்றன. பல சந்தர்ப்பங்களில் “சர்வதேச சட்டம் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்” எனக் குரோசிய தலைவர் குறிப்பிட்டுள்ளார். இது உலகில் உள்ள பல நாடுகளின் கருத்துகளோடும் ஒத்துப்போகிறது.
சிறிய நாடுகளுக்கு குரல் இல்லையா?
குரோசியாவின் இந்த நிலைப்பாடு முழுமையாக அரசு கொள்கையாக இல்லாவிட்டாலும், அந்நாட்டின் அரசியல் விவாதங்களில் மனிதாபிமான அணுகுமுறை வலுப்பெற்று வருவதை காட்டுகிறது. குறிப்பாக இளைஞர்கள், மனித உரிமை இயக்கங்கள் மற்றும் இடதுசாரி அரசியல் வட்டாரங்கள் காசா மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தி வருகின்றன.
இன்றைய உலக அரசியலில் சிறிய நாடுகளின் குரல்கள் கூட முக்கியத்துவம் பெறுகின்றன. குரோசியா போன்ற நாடுகள் வெளிப்படுத்தும் எதிர்ப்புகள், காசா போரின் மீதான உலக மனநிலையை பிரதிபலிக்கின்றன. இராணுவ சக்தி மட்டுமல்ல, மனிதாபிமான பொறுப்பும் சர்வதேச அரசியலின் அஸ்திவாரமாக இருக்க வேண்டும் என்பதையே இந்தக் குரல்கள் நினைவூட்டுகின்றன.
காசா போரின் முடிவு எப்போது என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால் அந்தப் போருக்கு எதிராக உலகின் பல மூலைகளிலிருந்து எழும் குரல்கள், மனித இனத்தின் மனசாட்சி இன்னும் உயிருடன் இருப்பதை உணர்த்துகின்றன. அந்தக் குரல்களில் பால்கன் தேசமான குரோசியாவின் குரலும் இன்று கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக மாறியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய வேறுபாடு:
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் (European Union) உட்பகுதியில் கூட இஸ்ரேல் குறித்து ஒரே மாதிரியான நிலைப்பாடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சில ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலுக்கு முழுமையான ஆதரவைத் தொடரும் நிலையில், மற்ற நாடுகள் மனித உரிமை மற்றும் சர்வதேச சட்ட அடிப்படையில் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றன.
இந்நிலையில், இந்த விவகாரம் இஸ்ரேல் – குரோசிய உறவுகளில் தற்காலிக பதற்றத்தை உருவாக்கக்கூடும் என்பதோடு, ஐரோப்பாவில் இஸ்ரேலின் அரசியல் ஆதரவு மெதுவாக மாறி வருகிறதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
அதேவேளை குரோஷியாவின் இந்த நடவடிக்கை, சிறிய நாடுகளும் உலக அரசியலில் தனித்துவமான குரலை வெளிப்படுத்த முடியும் என்பதை நினைவூட்டுகிறது. குறிப்பாக காசா போரின் பின்னணியில், உலக நாடுகளின் இராஜதந்திர உறவுகள் புதிய சோதனைகளை எதிர்கொண்டு வருகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button