இலங்கை

தேர்தலை நடத்தாமல் விடுவதன் மூலம் மாகாண சபை முறையை இல்லாது செய்ய அரசு சதி; அதற்கான சூழலை தோற்றுவித்து வருகின்றனர்; சுரேஷ் கண்டனம் 

மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல், ஒட்டு மொத்த மாகாண சபை முறைமையையே இல்லாமல் செய்வதற்கான சூழலை தற்போதைய அரசு தோற்றுவித்து வருகின்றது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்;

மாகாண சபைத் தேர்தலை தமது அரசு நடத்தும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அமைச்சர்கள் தொடர்ச்சியாகக் கூறிவரும் நிலையில், நாடாளுமன்றத்திலோ அல்லது அமைச்சரவையிலோ அங்கம் வகிக்காத ஜே.வி.பி கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மாகாண சபைத் தேர்தல் 2027ஆம் ஆண்டிலேயே நடத்தப்படும் என கூறியுள்ளமை கண்டிக்கத்தக்கது

“மாகாண சபைத் தேர்தலுக்காக கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியானது டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்படுத்தப்பட்டு விட்டதால் இந்த வருடம் தேர்தல் நடத்தப்படமாட்டாது என ரில்வின் சில்வா யாழ்ப்பாணத்தில் அறிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் ஒப்புதலுடன் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்டநிதியை வேறு தேவைகளுக்கு பயன்படுத்தியிருந்தால் அது பாராளுமன்றத்திலேயே வெளிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஜனாதிபதியோ அமைச்சரவைப் பேச்சாளரோ பேச வேண்டிய விடயங்களை அரசில் எந்தப்பதவியும் இல்லாத ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் தானே அரசை நடத்துவது போன்று போன்ற தொனியில் பேசுவது பாராளுமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.

மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் விஷேட தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டு, அது பலமுறை கூடி ஆராய்ந்து வரும் பின்னணியில் ரில்வின் சில்வாவின் இந்த அறிவிப்பு தேர்தல் முடக்கச் சதியை வெளிப்படுத்துகின்றது.

தமிழ் மக்கள் தங்களுபை அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான சூழலை உருவாக்க வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசுக்குப் பாரிய அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.

வடக்கிலாவது மாகாண சபை தேர்தலை நடத்திக் காட்டுங்கள் பார்க்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசுக்கு பகிரங்க சவால் விடுத்திருந்தார். முழு நாட்டிலும் தேர்தலை நடத்த முடியாவிட்டாலும், வடக்கு, கிழக்கில் மட்டும் தேர்தலை நடத்துவதற்கு அரசுக்குப் பாரிய நிதி தேவைப்படாது. இந்தச் சூழவில் தமிழ்த் தலைமைகள் ஒன்றிணைந்து அழுத்தங்களைக் கொடுக்கத் தவறினால் தமிழர் விரோத செயற்பாடுகளுக்கு நாமும் துணைபோவதாக அமைந்துவிடும்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தாங்கள் தீர்க்கப்போவதாக கூறும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், வடபகுதி மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் எதனையும் தீர்க்கவில்லை.

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமானங்கள் வந்து இறங்கக்கூடிய அளவில் விஸ்தரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு கண்டும் காணாமல் இருக்கின்றது. இதனைச் செய்திருந்தால் அரசின் வருவாய் அதிகரித்திருக்கும்.

வடக்கு மாகாண அபிவிருத்தியில் தற்போதைய அரசு என்ன சாதனையை பூரிந்துள்ளது? அல்லது இங்குள்ள எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது?

இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள நிலையில், தற்போது கொழும்பில் தேசிய அரசு அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.எனினும் தேசிய அரசு அமைப்பதை காட்டிலும் முடங்கியுள்ள மாகாண சபைகளை நிறுவினால் மாகாண அரசுகளே தாங்களாக முன்வந்து பல அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு பொருளாதாரத்துக்கு பங்களிக்க முடியும் என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button