இலங்கை

முன்னாள் ஜனாதிபதிகளை நீதிமன்றில் நிறுத்தியுள்ளோம்; ஜனாதிபதி அனுர தெரிவிப்பு

முன்னாள் ஜனாதிபதிகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முன் நிறுத்தவும் அவர்களை நீதிமன்றத்தின் முன்னால் கொண்டுவரவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும், இதன்படி அனைவரும் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள் என்பதுடன், எவரும் சட்டத்தை விட உயர்வானவர்கள் கிடையாது எனவும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நிந்தவூர் கலாசார நிலையத்தின் நீர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இதனைக் கூறியுள்ளார்.

அங்கு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது,

எமது நாட்டில் இலஞ்சம்,ஊழல் மற்றும் வீண் விரயத்தை ஒழிக்க மக்கள் ஆணையை வழங்கினார்கள். அரசியல் அதிகாரத்தில் இருந்து திருட்டை முழுமையாக அளித்துள்ளோம். ஆனால் செய்வதற்கு எதுவுமின்றி பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.நானும் எனது அமைச்சரவையும் எனது எம்.பிக்களும் மக்களின் ஒரு சதத்தையும் திருடவோ வீண்விரயம் செய்யவோ மாட்டோம் என உத்தரவாதம் அளிக்கிறோம். அவ்வாறு யாராவது இருந்தால் அவர்களுக்கு எமது அரசில் இடமில்லை. அவ்வாறான அரசாங்கத்தை தான் மக்கள் எதிர்பார்த்தார்கள். இலஞ்ச ஊழல் பெறுவோருக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்டவேண்டிய தேவை இருந்தது. கடந்த காலத்தில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுகள் பற்றி உங்களுக்கு தெரிவித்திருக்கிறேன். அவர்களுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்ட வேண்டும்.

பெருமளவான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது. பல மோசடிக்காரர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவை தொடர்பில் நீதிமன்றம் நியாயமாக விசாரணை நடத்தி தண்டனை வழங்கும் என எதிர்பார்க்கிறோம்.மோசடிக்காரர்களுக்கு எதிராக தண்டனை வழங்க மக்கள் தந்த ஆணையை நாம் நிறைவேற்றுகிறோம்.

சட்டம் நியாயமாக நிறைவேற்றப்பட வேண்டும். மேல்மட்டத்தில் உள்ளவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படவில்லை. சாதாரண மக்களுக்கு எதிராகவே சட்டம் செயற்படுத்தப்பட்டது. பணம் இருந்தால், அதிகாரமிருந்தால் அவர்களுக்கு எதிராக சட்டம் நிறைவேற்றப்பட மாட்டாது. ஏழையாகவோ அதிகாரம் இன்றியோ இருந்தால் சட்டம் அமுல்படுத்தப்படும்.பணம் இருக்கிறதா அதிகாரம் இருக்கிறதா ஏழையா பணக்காரரா என்ற பேதமின்றி அனைவருக்கும் சமமாக சட்டம் நிறைவேற்றப்படும்.

முன்னாள் ஜனாதிபதிகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முன் நிறுத்தியுள்ளோம். முன்னாள் ஜனாதிபதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்துள்ளோம். இலங்கையில் ஒருபோதும் இவ்வாறு நடந்தது கிடையாது. அனைவரும் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள். எவரும் சட்டத்தை விட உயர்வானவர்கள் கிடையாது. அவ்வாறு இருந்தால் மட்டுமே நாட்டை கட்டியெழுப்ப முடியும். வளர்ச்சியடைந்த நாடுகளில் சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள்.

ஆனால் சட்டத்தை அமுல்படுத்தும் போது சிலர் குழப்பமடைகிறார்கள். அந்த குழப்பத்தைப் பார்த்து நாம் எடுத்த முன்னெடுப்புகளை மாற்ற முடியாது. பஸ்களில் ஆட்களை அழைத்து வந்து வீதியில் கோசம் எழுப்பியதற்காக சட்ட நடவடிக்கைகளை மாற்ற மாட்டோம். என்னைத் தவிர வேறு யாரும் சட்டத்தை நிலைநாட்ட மாட்டார்கள்.

அரசியல்வாதிகளின் பல்வேறு சலுகைகளை நீக்கியுள்ளோம். 5 வருடங்கள் பணியாற்றிய எம்.பிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. பலருக்கு இந்த சலுகை கிடைத்தது. அது தவறு என பொதுமக்கள் கூறினார்கள். அதனை நிறுத்த முடிவு செய்தோம். அதனை நிறுத்தினால் தற்கொலை செய்வதாக சொன்னார்கள். வழக்குத் தாக்கல் செய்வதாக எச்சரித்தார்கள். ஆனால் நாம் அவற்றுக்கு அஞ்சவில்லை. எம்.பிகளின் ஓய்வூதியத்தை ரத்துச் செய்தோம்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரச செலவில் வீடு, வாகனம் என்பன வழங்கப்பட்டன. அரசாங்கத்தினால் தான் மின்கட்டணம், நீர்க்கட்டணம் என்பன செலுத்தப்படுகிறது. அவற்றை நாம் நிறுத்தினோம். சிலர் வீட்டை விட்டும் வெளியேற முடியாது என்றனர். வீட்டை விட்டும் வெளியேறினால் மக்களை திரட்டி சுற்றிவளைப்பதாகச் சொன்னார்கள். அதனை நாம் பொருட்படுத்தவில்லை. நாம் சட்டத்தை உருவாக்கி பாராளுமன்றத்தில் நிறைவேற்றினோம். அதன் பின்னர் அவர்கள் சத்தமின்றி வெளியேறினார்கள். வீண் விரயங்களை குறைக்க வேண்டும். அரசியல்வாதிகள் மக்களுக்கு பணியாற்றுபவர்களாக மாற்ற வேண்டும். அதனை நாம் செய்திருக்கிறோம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button