பொய்க் குற்றச்சாட்டு சுமத்திய அர்ச்சுனா மன்னிப்பு கேட்க வேண்டும்

எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய்க் குற்றச்சாட்டை முன்வைத்த அர்ச்சுனா இராமநாதன் எம்.பி.க்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்
பாராளுமன்றத்தில் சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்தே இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் தெரிவிக்கையில்,
மே 19ஆம் திகதியன்று அர்ச்சுனா இராமநாதன் எம்.பி இந்த சபையில் உரையாற்றும் போது எனது பெயரைக்கூறி ஒரு விடயத்தை குறிப்பிட்டிருந்தார். பாராளுமன்ற நூலகத்தில் வைத்து கௌசல்யா நரேந்திரன் என்பவர் தொடர்பில் நான் தவறாக குறிப்பிட்டதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவர் கூறுவது முற்றிலும் பொய் நான் ஒருபோதும் அவ்வாறு பேசவில்லை என்பதுடன் சம்பந்தப்பட்டவரை நான் சந்திக்கவும் இல்லை.
ஆனால் அந்தப் பெண் தொடர்பில் நான் பாராளுமன்றத்தில் வைத்து தவறாக கதைத்ததாக குறித்த எம்.பி குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு பொய்யான விடயத்தை கூறுவதன் மூலம் எனது நற்பெயருக்கும் களங்கம் ஏற்படும். இவ்வாறு குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் செயற்பாடானது எனது சிறப்புரிமையை மீறுவதாக அமையும். இதன்படி அந்த பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் என்பதுடன், என்னைப்பற்றி பொய்யான விடயத்தை குறியமைக்காக அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்றார்.
இதனை தொடர்ந்து இந்த விடயத்தை சிறப்புரிமை குழுவுக்கு அனுப்பி வைப்பதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
![]()