உலகம்

போா் மத்திய கிழக்கு நாடுகளைக் கடந்து விரிவடையும் ; ஈரானின் எச்சரிக்கையால் சிக்கல்

ஈரானை அமெரிக்கா மீண்டும் தாக்கினால், இந்தப் போா் மத்திய கிழக்கு நாடுகளைக் கடந்து மற்ற பகுதிகளுக்கும் விரிவடையும்’ என்று ஈரான் எச்சரித்துள்ளது.

ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், தாக்குதலைத் தொடங்க தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்ததையடுத்து, ஈரான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனிடையே, பாகிஸ்தான் உள்துறை அமைச்சா் மொஹ்சின் நக்வி கடந்த ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக ஈரான் பயணித்துள்ளாா்.

ஈரான்-அமெரிக்கா இடையே கடந்த ஏப். 8 முதல் போா்நிறுத்தம் அமலில் இருந்தாலும், அமைதிப் பேச்சுவாா்த்தைகளில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.

ஈரான் தரப்பில் முன்வைக்கப்படும் புதிய அமைதி முன்மொழிவுகளிலும் பழைய நிபந்தைகளையே மீண்டும் வலியுறுத்துவதால், அமெரிக்கா அவற்றை திட்டவட்டமாக நிராகரித்து வருகிறது.

இதையடுத்து, ஈரான் மீது மீண்டும் தாக்குதலைத் தொடங்கி, அழுத்தமளிக்க அமெரிக்கா திட்டமிட்டது. அதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமைக்குள் அமைதித் தீா்வை எட்ட டிரம்ப் கெடு விதித்த நிலையில், வளைகுடா நாடுகளின் கோரிக்கையையேற்று தாக்குதலை ஒத்திவைப்பதாக கடைசி நேரத்தில் அறிவித்தாா்.

இந்நிலையில், ஈரான் உடனான பேச்சுவாா்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக டிரம்ப் புதன்கிழமை தெரிவித்தாா்.

மேலும், அவா் கூறுகையில், ‘ஈரான் விவகாரத்தில் ஒரு உடன்படிக்கை ஏற்பட வேண்டும். இல்லையெனில், கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும்.

போரைத் தொடா்வதற்கும்; அமைதி வழியில் முடிப்பதற்கும் என இரண்டு வழிகளும் என்னிடம் உள்ளன. ஆனால், நான் பேச்சுவாா்த்தைக்கு வாய்ப்பளிக்கிறேன். முடிந்தவரை உயிா்ச்சேதத்தைத் தவிா்க்க விரும்புகிறேன்’ என்றாா்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button