இந்த அரசு ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடம் கடந்துவிட்டது; சமாதானத்தை பற்றி பேசுவதற்கான தூரம் மிக தொலைவிலேயே உள்ளது

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப்பொறுப்புக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டன.ஆனால் சமாதானத்தை பற்றி பேசுவதற்கான தூரம் மிக தொலைவிலேயே தெரிகிறது என தெரிவித்த இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், தமிழர்கள் இந்த நாட்டின் தேசிய இனம் – அவர்களுக்கிருக்கின்ற தேசிய உரித்துகள்,தேசிய அடையாளங்களை சிங்கள இனம் ஏற்றுக்கொள்ளும் பொழுது தான் தமிழர்களும் சிங்களவர்களும் இந்த நாட்டினுடைய சம பங்காளிகளாக இந்த நாட்டை நிமிரச்செய்வதில் மிகப்பெரும் பங்கை கொண்டிருப்போம் எனவும் அந்த காலத்துக்காக சிங்கள மக்களோடு சேர்ந்து உழைப்பதற்கு நாங்கள் (தமிழர்கள்) தயாராக இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
நேற்று புதன்கிழமை பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தேசிய சமாதான பேரவை நடத்திய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த ஸ்ரீதரன் எம்.பி. மேலும் தெரிவிக்கையில்;
சமாதானத்தை எட்டுதல் என்ற விடயத்தில் பல்வேறுபட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அந்த முயற்சிகள் சரியான பாதையை நோக்கி இலங்கையில் நகர்ந்து செல்கிறதா என்றால் அது ஒரு சந்தேகமான பார்வைகளையே தந்திருக்கிறது.குறிப்பாக இந்த நாடு பௌத்த நாடு என்பதே அடிப்படையாகும்.இங்கு பௌத்த மதம் அரச மதம்.ஏனைய மதங்கள் அவ்வாறான அரச அங்கீகாரத்துக்கு உரியவை அல்ல. ஆகவே இங்கு புத்த விகாரைகளை அமைத்தல் அல்லது பௌத்த விகாரைகளை அமைப்பதற்கான இடங்களை தெரிவுசெய்தல் என்பதில் எந்த தடைகளும் இல்லை.காரணம்,அவர்களுக்கு அவை உறுதியாகவே வழங்கப்படுகிறது. அதேவேளை ஒரு இந்து ஆலயத்துக்கோ அல்லது கத்தோலிக்க ஆலயத்துக்கோ, இஸ்லாமிய பள்ளிவாசல்களுக்கான நிலம் என்பது நீண்டகால குத்தகை அடிப்படையிலேயே பெற்றுக்கொள்ள முடியும். எனவே மதரீதியாக கூட இந்த நாட்டில் வேறுபாடுகள் இன்றுவரை இருக்கிறது. குருந்தூர்மலை, வெட்டுக்குநாறிமலை, நீராவியடி, தையிட்டி ,குச்சவெளி போன்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகள் அடாத்தாகவே அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த 18 ஆன் திகதி முள்ளிவாய்க்காலில் திரண்ட மக்களின் கண்ணீரை இந்த உலகம் பார்த்தது. எத்தனை பேருடைய குழந்தைகள்,எத்தனை பேருடைய தாய்-தந்தையர்கள், எத்தனை பேருடைய கணவன்-மனைவி கதறி அழுதார்கள்.இன்றும் முள்ளிவாய்க்காலுக்கு வந்த பல பெண்கள் தங்களுடைய நெற்றியிலுள்ள பொட்டை அழிக்காமல் இருக்கிறார்கள்,தங்களுடைய தாலியை களற்றாமல் இருக்கிறார்கள்.காரணம்,தன்னுடைய கணவர் என்றோ ஒருநாள் வருவார் என்ற கனவோடு அவர்கள் காத்திருக்கிறார்கள். அருட்தந்தை பிரான்சிஸ் மற்றும் அவருடைய தலைமையில் 56 போராளிகள் 2009 ஆம் ஆண்டு மஹிந்தவிடம் அடைக்கலம் புகுந்தார்கள். ஆனால் அவர்கள் எவரையும் இன்றுவரை காணவில்லை. அவர்களுக்கு நீதியும் கிடைக்கவில்லை.இறுதி யுத்தத்தில் பல ஆயிரக்கணக்கானவர்கள் சரணடைந்தார்கள். அவர்களில் எவரும் இன்றுவரை வெளியில் வரவில்லை.கண்கண்ட சாட்சிகளாக தந்தையை ஒப்படைத்த பிள்ளைகள்,பிள்ளையை ஒப்படைத்த தந்தையர்கள்,கணவனை ஒப்படைத்த மனைவிமார் கண்ணீரோடு இன்றும் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.அவர்களுக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை.
சமாதானம் என்பது மனங்களை ஒன்றுபடுத்தவேண்டும்; வலிகளை ஆற்றுப்படுத்தவேண்டும்; அவர்களுடைய ஆழமான ரணங்களுக்கு ஒத்தடம் கொடுப்பதாக இருக்கவேண்டும். ஆனால், இன்றுவரை அந்த ஒத்தடம் தமிழர்களுக்கு கிடைக்கவில்லை.உள்நாட்டுக்குள்ளேயே ஆயிரக்கணக்கான தமிழர்கள் இன்றும் அகதிகளாக வாழ்கிறார்கள். யுத்தம் நிறைவடைந்து 17 ஆண்டுகள் கழிந்தும் ஆறாத வடுக்களுடன் தான் தமிழர்கள் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தமிழர்கள் என்பவர்கள் இந்த நாட்டினுடைய பூர்வீக குடிகள் என்பது வரலாறு. இந்த வரலாறு இந்த நாட்டில் வாழ்கின்ற அனைவருக்கும் தெரிந்த விடயம்.
இன்றும் தமிழர்கள் சொந்த நாட்டுக்குள்-தங்களுடைய தாயக மண்ணில் சுதந்திரமற்ற மனிதர்களாக இருக்கிறார்கள். இன்றும் தங்களது உறவுகளை நினைவுகூருவதற்கு தமிழர்கள் தடுக்கப்படுகிறார்கள்.இவை ஏன் இன்றும் நடக்கின்றன?.146,610 பேர் காணாமல்போயும் கொல்லப்பட்டுமிருக்கிறார்கள் என மறைந்த மன்னார் மாவட்டத்தின் பேராயர் இராயப்பு ஜோசப் அவர்கள் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு முன்னால் சாட்சியமளித்திருக்கிறார்.அந்த சாட்சி இன்று உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால்,அதற்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது,ஜெனீவாவுக்கு சென்று தமிழர்களுக்கு எதுவும் கிடைக்காது,தமிழர்கள் உள்நாட்டில் தான் பேசவேண்டும் என கூறுகிறார்.அந்தளவுக்கு இந்த தலைவர்களுடைய மன நிலைகள் இருக்கின்றது. எங்களுக்கான (தமிழர்கள்) நீதியை நீங்கள் தந்திருந்தால் நாங்கள் ஜெனீவாவுக்கு செல்லவேண்டிய தேவையிருந்திருக்காது.யாரோடும் சேர்ந்து நாங்கள் (தமிழர்கள்) வாழமாட்டோம் என்று கூறவில்லை. சிங்கள மக்களுக்காக வாதிட்டதற்காக சேர் பொன் ராமநாதனை தேர்கட்டி இழுத்தவர்கள் சிங்களவர்கள். போயா தினத்தை விடுமுறையாக முதல்முதலாக இந்த நாட்டில் கொண்டுவந்தவர் சேர் பொன் ராமநாதன்.இந்த நாட்டில் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்-அனைத்தினத்தவர்களுக்கும் அவர்களுக்குரிய அங்கீகாரங்கள் வழங்க வேண்டுமென போராடியவர்கள் தமிழர்கள்.அதேபோல்,மண்ணின் விடுதலைக்காக பல முஸ்லீம்- மலையக தலைவர்கள் போராடியிருக்கிறார்கள்.ஆனால் இன்று இவர்கள் மாற்றாந்தாய் பார்வையில் பார்க்கப்படுகிறார்கள்.
இந்த நாட்டில் தமிழர்கள் ஒரு தேசிய இனம். அவர்களுக்கே உரித்தான மொழி உண்டு. அவர்களுக்கே உரித்தான வரலாற்று வழி நிலம் உண்டு.அவர்களுக்கே உரித்தான கலாசார பண்பாட்டு அடையாளங்கள் உண்டு.இதனை ஏற்றுக்கொள்ள ஏன் சிங்கள தேசிய இனம் மறுக்கிறது? தமிழர்கள் இந்த நாட்டின் தேசிய இனம் என்பதை கூறும் தைரியம் ஏன் சிங்கள தலைவர் ஒருவருக்கு கூட இன்னும் வரவில்லை.முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்காக ஒரு மன்னிப்பை கோருவதற்கு கூட சிங்கள தலைவர்கள் ஏன் இன்னும் தயங்குகிறார்கள்?
எனவே, சமாதானத்துக்கான காலத்தை இந்த அரசு சரியாக கையில் எடுக்கவேண்டும். ஆட்சிப்பொறுப்புக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டன.ஆனால் சமாதானத்தை பற்றி பேசுவதற்கான தூரம் மிக தொலைவிலேயே தெரிகிறது.சமாதானம் என்பது வெறுமனே பேச்சளவில் இருந்துவிடக்கூடாது.நாங்களும் (தமிழர்கள்) நீங்களும் (சிங்களவர்கள்) இந்த நாட்டின் பிரஜைகளாக வாழவேண்டுமாகவிருந்தால் தமிழர்களுடைய தனித்தேசியம் – தமிழர்கள் ஒரு தேசிய இனம் – அவர்களுக்கிருக்கின்ற தேசிய உரித்துகள்,தேசிய அடையாளங்களை சிங்கள இனம் ஏற்றுக்கொள்கிறபொழுது – ஏனைய இனங்களையும் மதிக்கின்றபொழுது தமிழர்களும் சிங்களவர்களும் இந்த நாட்டினுடைய சம பங்காளிகளாக இந்த நாட்டை நிமிரச்செய்வதில் மிகப்பெரும் பங்கை கொண்டிருப்போம்.அந்த காலத்துக்காக சிங்கள மக்களோடு சேர்ந்து உழைப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
![]()