கோத்தா ஆட்சியின் இருண்ட யுகம் தற்போதும் தொடர்கிறது

கோத்தாவின் ஆட்சியின் இருண்ட யுகம் தற்போதும் தொடர்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொது செயலரும் எம்.பி.யுமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற இலங்கை மத்திய வங்கியின் 2025ஆம் ஆண்டிற்கான பொருளாதார மீளாய்வு அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
டொலரின் பெறுமதி நாளுக்கு நாள் உயர்வடைந்து செல்கிறது.ரூபாவின் பெறுமதியும் வீழ்ச்சியடைகிறது. அரசாங்கம் எதனையும் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறது.முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் ஆட்சியின் இருண்ட காலம் தற்போதும் தொடர்கிறது. அந்த ஆட்சியிலும் டொலர் பெறுமதி உயர்வடைந்து பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடம் நிறைவடைந்துள்ளது.இதுவரையில் எவ்விதமான பொருளாதார அபிவிருத்தி கருத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. இவ்வாறான பின்னணயில் எவ்வாறு பொருளாதார முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியும்.?
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எவ்விதத்திலும் நிவாரணமளிக்கவில்லை. நடுத்தர மக்களின் கார் கொள்வனவு கனவு கேள்விக்குள்ளாகியுள்ளது. அரசாங்கத்துக்கு சார்பாக செயற்படும் கம்பனிகளுக்கு இறக்குமதிக்கான மேலதிக சுங்க வரி 50 சதவீதத்தால் அதிகரிக்கப்படுவதற்கு முன்னர் 3500 இற்கும் அதிகமான கார்களுக்கு கடன்பற்றுப் பத்திரங்களை விநியோகித்துள்ளனர் . அரசாங்கம் அவர்களுக்கு மாத்திரம் வரி சலுகை வழங்கியுள்ளது என்றார்.
![]()