இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் நீதிமன்றத்தில் ரகசியம் அம்பலம்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை  கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ், முன்னாள் அரச புலனாய்வுச் சேவை (SIS) தலைவர் சுரேஷ் சலே இந்தத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

உயிர்த்த தாக்குதலுக்குப் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பஸில் ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்று பிள்ளையானைச் சந்தித்ததாகவும், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியான ஒரு வாரத்திற்குள் அவரை விடுவிப்பதாக அங்கு உறுதியளிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரான்ஸில் அஸாத் மௌலானாவிடம் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், சுரேஷ் சலே தாக்குதலின் திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பில் முக்கிய பங்காற்றியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், பிள்ளையான் குழுவும் இராணுவ புலனாய்வுப் பிரிவும் இணைந்து பல குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், உயிர்த்த தாக்குதல் தொடர்பான தகவல்களை தேர்தல் வரை மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

இந்நிலையில், சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவிந்ர பெர்னாண்டோ, அஸாத் மௌலானாவின் வாக்குமூலத்தை சாட்சியமாக ஏற்க முடியாது என்றும், அவை நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் வாதிட்டார்.

அனைத்து தரப்பினரின் சமர்ப்பணங்களையும் பரிசீலித்த நீதவான், சுரேஷ் சலேயை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டாம் என்ற கோரிக்கையும், அவர் ரகசிய வாக்குமூலம் வழங்க அனுமதி கோரிய மனுவும் தொடர்பான உத்தரவை ஜூலை 01 ஆம் திகதி அறிவிப்பதாக தெரிவித்தார்.

அதுவரை சுரேஷ் சலேயை தொடர்ந்து தடுப்புக் காவலில் வைக்குமாறும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button