கவிதைகள்
கற்பனைக்கு அணையுமுண்டோ?… கவிதை… சங்கர சுப்பிரமணியன்

அருவியிலே கொட்டுகின்ற நீரை
யாரும் பாழாகிறதே என எண்ணி
அருவி நீரனைத்தையும் முயன்று
யாரும் குவளையில் அடைப்பாரோ
தென்றலின் இனிமையில் மயங்கி
மன்றிலே ஓடிவரும் தென்றலையும்
எவரும் வேறொரு நாள் உதவுமென
குடுவையில் சேகரித்து வைப்பாரா
மல்லிகை மலர்கள் மீதே தவழ்ந்து
எல்லை ஏதுமின்றி வீசும் காற்றை
தொல்லையென துரத்த முடியுமா
இல்லையதை தேக்கவும் முடியுமா
ஆற்று வெள்னமென கற்பனை ஊற
காட்டாற்று வெள்ளமாய் கரை புரள
வற்றாத ஆறாய்நின்று வளமாய் பாய
நிற்காத மழையாய் நீண்டு பெய்யுதே
எந்த ஆற்றலும் இதனைத் தடுத்திடுமா
மந்தமாக்கி செயலாற்ற வழியுமுண்டோ
எத்தனை நூல் இயற்றி அதைத் தடுப்பீர்
அத்தனையும் மீறி தமிழ் கடல் கலக்கும்

![]()