இலங்கை

இராணுவத்தினருக்காக முன்நிற்க ஒருபோதும் பின்வாங்கமாட்டோம்;  வீரவன்சவை பொலிஸார் துரத்தித் துரத்தி அடித்தனர்-நாமல் சீற்றம்

பயங்கரவாத நிகழ்ச்சி நிரலை மேற்கொண்டவர்களுக்கு யுத்த நிகழ்வை அனுஷ்டிக்க முடியும். ஆனால், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உயிர்களை தியாகம் செய்த இராணுவ வீரர்களை கௌரவிக்க சென்றபோது, அவரை பொலிஸார் துரத்தித் துரத்தி அடித்தனர். இது வெட்கப்பட வேண்டிய விடயம் . நாங்கள் விடுதலைப் புலிகளுடனேயே யுத்தம் செய்தோமே தவிர, தமிழ் மக்களுடன் அல்ல. எனவே இராணுவ வீரர்களுக்காக முன்நிற்பதற்கு நாங்கள் ஒருபோதும் பின்வாங்கமாட்டோம் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் எம்.பி.யுமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

நாட்டில் 30 வருடம் இடம்பெற்ற யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து 17 வருடங்கள் ஆகின்றன. இந்த யுத்த வெற்றிக்காக நாட்டு மக்கள், இராணுவத்தினர், பொலிஸார், சிவில் அமைப்பினர் என அனைவரும் பாரிய அர்ப்பணிப்பு செய்தார்கள். இன்று ஒருசிலருக்கு இராணுவ வீரர்களை , இராணுவ வீரர்கள் எனத் தெரிவிப்பதற்கு முடியாமல் போனாலும் அவர்களின் அர்ப்பணிப்பு காரணமாகவே பெரும்பான்மையானவர்கள் இன்று சுதந்திரமாக இருக்கிறார்கள்.

சிலர் நாங்கள் தமிழ் மக்களுடன் யுத்தம் செய்ததாக அர்த்தம் கற்பிக்க முற்படுகிறார்கள். நாங்கள் விடுதலைப் புலி பயங்கரவாதிகளுடனேயே யுத்தம் செய்தோமே தவிர, தமிழ் மக்களுடன் அல்ல. இந்திய பிரதமரை கொலை செய்த, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தந்தை ரணசிங்க பிரேமதாசவை கொலை செய்த, லக்ஷ்மன் கதிர்காமர், துரையப்பா போன்ற தமிழ் தலைவர்களை கொலை செய்த, அதேபோன்று அரந்தலாவ பிக்குகளை கொலை செய்த, காத்தான்குடி பள்ளிவாசலில் முஸ்லிம் மக்களை கொலை செய்த விடுதலை புலிகளுடனேயே யுத்தம் செய்தோம்.

அதுமாத்திரமல்ல, அன்று பாடசாலைக்கு செல்லும் சிறுவர்களின் கைகளுக்கு சயனைட் குப்பிகளே வழங்கப்பட்டன. இன்று அந்த சயனைட் குப்பிகளை கழற்றி, பேனையை கையில் கொடுத்ததன் மூலம் உயர்தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலாம், இரண்டாம் இடங்களுக்கு அவர்கள் வர முடிந்தது. பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு, வடக்கு மாகாணம் அபிவிருத்தியடைந்ததாலேயே இது சாத்தியமானது. அதனால் அந்த கெளரவத்தை இராணுவ வீரர்களுக்கும் அப்போது இருந்த தலைவர்களுக்கும் வழங்க முடியாது என்றால், அது தொடர்பில் பேசிப் பயனில்லை. ஏனெனில் இவர்களுக்கு இருப்பதும் கழுத்து வெட்டிய வரலாறாகும். தற்போதும் அந்த மனநிலை தான் இருக்கின்றது.

நாட்டின் தலைவரான ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு யுத்த வெற்றியை பெற்றுக்கொடுத்த இராணுவ வீரர்களுக்கு வாயால் வாழ்த்து தெரிவிக்க முடியாது என்றால், குறைந்தபட்சம் எக்ஸ் தளம், முகப்புத்தக கணக்குகள் ஊடாகவேனும் வாழ்த்து தெரிவிக்க முடியாமல் போய்விட்டது. அதேநேரம், பயங்கரவாத நிகழ்ச்சி நிரலை மேற்கொண்டவர்களுக்கு யுத்த நிகழ்வை அனுஷ்டிக்க முடியும். ஆனால், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உயிர்களை தியாகம் செய்த இராணுவ வீரர்களை கௌரவிக்க சென்றபோது, அவரை பொலிஸார் துரத்தித் துரத்தி அடிக்க முற்பட்டனர். இது வெட்கப்பட வேண்டிய விடயம் .

நாங்கள் தமிழ் மக்களுடன் யுத்தம் செய்யவில்லை. நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கவே யுத்தம் செய்தோம். அதனால் எந்தவகையான சவால்கள் வந்தாலும் நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாத்துக்கொள்ளவும் இராணுவ வீரர்களுக்காக முன்நிற்பதற்கும் நாங்கள் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button