இலங்கை

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைக்கு சர்வதேச தீர்வுகாண இடமளிக்கக் கூடாது; ஜெனீவாவுக்கு செல்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

எமது நாட்டு பிரச்சினைகளை நாட்டுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு உள்நாட்டுக்குள்ளேயே தீர்வுகாண வேண்டுமே தவிர, ஜெனீவாவுக்கு சென்று தீர்வு காண கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகள் இப்போது வளர்ந்தவர்களாகியிருப்பர். அன்று ஏற்பட்ட வேதனைகள், துன்பங்களை நாங்கள் அறிவோம். நானும் எனது தந்தையை பயங்கரவாத யுத்தத்தினாலேயே இழந்தேன். இதனால் எனக்கும் அந்த வேதனை புரியும். இராணுவ குடும்பங்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்களின் வேதனைகளை அறிவோம். இவ்வேளையில் இராணுவ வீரர்கள் என்ற வசனத்தை நாங்கள் பயன்படுத்த தயங்கக்கூடாது.

அத்துடன் இனியும் அதுபோன்ற ஒரு யுத்தம் ஏற்பட்டுவிடக்கூடாது. அவ்வாறு ஏற்படாத வகையில் நாங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களாக நாட்டில் பல்வேறு இனப் பிரிவினர் உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு நாங்கள் தீர்வுகளை வழங்க வேண்டும். அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க வேண்டியது ஜெனீவாவில் அல்ல. எமது நாட்டு பிரச்சினைகளை எமது நாட்டுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும். மீளக்கட்டியெழுப்புதல் செயற்பாடுகள் மூலமும், சகோதரத்துவம், நல்லிணக்கம் சூழலை உருவாக்கி நாங்கள் எமது நாட்டுக்குள் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளை நாங்கள் தீர்த்துக்கொள்ள வேண்டும். உண்மையிலேயே இந்நாட்டின் ஒருமைப்பாடு, சகோதரத்துவமானது இனங்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படுவதன் மூலம் மட்டுமே ஏற்படும்.

இதன்படி யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வுகளை எமது நாட்டுக்குள்ளேயே வழங்க வேண்டும். எப்போதும் வருடாந்தம் ஜெனீவாவுக்கு சென்று கதைப்பது நிறுத்தப்படும் வகையில் ஒருமைப்பாடு, ஆட்புல எல்லை, இறைமை மற்றும் அரசியல் சுதந்திரம் பாதுகாக்கப்படும் வகையில் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் யோசனையை முன்வைக்கின்றேன் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button