இலங்கை

வீரவன்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

இராணுவ நினைவிட பகுதியில் பொலிஸாரின் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் விமல் வீரவன்ச நடந்துகொண்டுள்ளார் என்றும், இதன்படி அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதில் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பத்தரமுல்லையிலுள்ள இராணுவ நினைவிடத்திற்கு அருகில் நேற்று முன்திம் திங்கட்கிழமை வீரவன்ச குழுவினர் சென்றிருந்த போது, அவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட முறுகல்நிலை தொடர்பில், அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவிக்கையில்,

எவரும் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்த முடியாது. சம்பந்தப்பட்ட நபர் எவ்வாறு பொலிஸாருடன் நடந்துகொண்டார் என்பதனை நாட்டு மக்கள் அனைவரும் பார்த்தனர். அவ்விடத்தில் தூசன வார்த்தைகளால் பொலிஸாரையும் அங்கிருந்தவர்களையும் பேசியதுடன், அமைதியற்ற முறையில் அவர் நடந்துகொண்டார். அதன்போது அவர் நடந்துகொண்ட முறை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. நீதிமன்றத்தின் ஊடாக பொலிஸார் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.

அங்கு பூங்கொத்தை வைக்க செல்வது, அமைதியற்ற முறையில் நடந்துகொள்வது என்பது வேறாகும். அங்கு படம்காட்டவும், குழப்புவதற்காகவும் சென்றனர். இது கார்ட்போர்ட் வீரர்களாக நினைக்கும் ஒன்றுமில்லாதவர்களின் புஷ் வேலைகளே ஆகும். இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button