முச்சந்தி

தமிழ் பேசக்கூடிய பெண் பொலிஸார் ஆட்சேர்ப்பு

தமிழ் மொழியில் பேசக்கூடிய பெண் பொலிஸ் அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கு சமூக ஊடகங்களில் பிரசார நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக இலங்கை பொலிஸை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட அதிகாரிகள் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரிவித்தனர்.

குறித்த அமைச்சு சார் ஆலோசனைக் குழு அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் பிரதியமைச்சர் நாமல் சுதர்சன ஆகியோரின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இதுபற்றித் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு முன்னர் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைக்கு அமைய பெண் பொலிஸ் அதிகாரிகளின் வெற்றிடங்களை நிரப்பும் செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதுவரையில் 50 பெண் பொலிஸ் பரிசோதகர்களை இணைத்துக்கொள்வதற்கும், 2600 பெண் கான்ஸ்டபிள்களை இணைத்துக் கொள்வதற்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருப்பதும் இங்கு தெரியவந்தது.

அத்துடன், தமிழ் மொழியில் பேசக்கூடிய பெண் பொலிஸ் அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கு சமூக ஊடகங்களில் பிரசார நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கா பொலிஸை பிரதிநிதித்துவப்படுத்தி குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ் பேசும் குடும்ப நல சுகாதார சேவையாளர்களின் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், இவற்றை நிவர்த்தி செய்வது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.

தமிழ் மொழியில் கல்வி பொதுத் தராதர (உயர்தர) பரீட்சையைப் பூர்த்தி செய்த மாணவ- மாணவியர் இது தொடர்பில் கவனம் செலுத்துவது பற்றி விழிப்புணர்வூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்புஅதிகார சபை மற்றும் ஏனைய நிறுவனங்களில் காணப்படும் இந்நாட்டு சிறுவர்கள் பற்றிய சகல தகவல்களையும் சேகரித்து தேசிய தகவல் கட்டமைப்பொன்றைத் தயாரிப்பதன் முன்னேற்றம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button