இலங்கை

இறந்தவர்களால் நீதி கோரிப் பேச முடியாது; அவர்களுக்காக நாமே குரலெழுப்ப வேண்டும் – பிரிட்டன் எம்.பி. உமா குமாரன் வலியுறுத்து

“இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிசெய்யப்படுவதை முன்னிறுத்தி நான் எனது குரலையும், அதிகாரத்தையும் பயன்படுத்துவேன். இறந்தவர்களால் நீதிக்காக குரலெழுப்ப முடியாது. அவர்களுக்கான அதனைச் செய்வது உயிருடன் இருப்பவர்களின் கடமையாகும்.”- இவ்வாறு பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமாரன் வலியுறுத்தியுள்ளார்.

2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு நேற்றுடன் 17 ஆண்டுகள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில், இது குறித்து உமா குமாரன் தெரிவித்துள்ளதாவது:-

“மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுகூரப்படுகின்றது. இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது இராணுவத்தினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களை 17 ஆண்டுகளின் பின்னர் இம்முறை நினைவுகூருகின்றோம்.

 

போரிலிருந்து தப்பிழைத்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வலியும், வேதனையும் இப்போதும் தொடர்கின்றது. இது உலகளாவிய ரீதியில் பரந்துவாழும் புலம்பெயர் தமிழர்களின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கின்றது.

 

குழந்தைகளின் எலும்புக்கூடுகள் உள்ளங்கலாக மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட செம்மணி, சித்துபாத்தி மனிதப்புதைகுழியானது, தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மனிதாபிமான மீறல்களை நினைவூட்டுகின்றது.

 

ஒவ்வொரு ஆண்டும் கடந்து செல்லும்போது பொறுப்புக்கூறலுக்கான எமது குரல்கள், முன்னெப்போதையும் விட மிக வலுவாக ஓங்கி ஒலிக்கின்றன. நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு உண்மையையும், நீதியையும் உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும். எனினும் இன்னமும் மௌனமும், தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்குமே தொடர்கின்றது.

 

இவ்வாறானதொரு பின்னணியில் இத்தகைய மீறல்கள் மீண்டும் நிகழாத, அமைதியான எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். அதேபோன்று மீறல்களிலிருந்து உயிர்பிழைத்தவர்களின் கதைகள் மௌனமாக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வோம். இறந்தவர்களால் நீதிக்காக குரலெழுப்ப முடியாது. அவர்களுக்கான அதனைச் செய்வது உயிருடன் இருப்பவர்களின் கடமையாகும்.” – என்று பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமாரன் வலியுறுத்தியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button