திசை காட்டியிடம் சிக்கி விடாதீர்கள்

தேசிய மக்கள் சக்தியின் அரசியல் நாமம் இப்போது சீர்குலைந்து வருதால், ஜே.வி.பியால் மட்டும் அது நடந்தது என்று கூறிவிடாமல் ஏனைய கட்சிகளையும் அதற்கு காரணமாக்குவதற்கு முயற்சிக்கப்படுகின்றது . இதில் எதிர்க்கட்சிகள் சிக்கி விடக் கூடாது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை அரசியல் நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்னவே இவ்வாறு கூறியுள்ளார்.இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பல்வேறு கட்சிகளில் திறமையுள்ளவர்களை நாங்கள் இணைத்துக்கொள்வோம் என்று அரசாங்கத்தில் உள்ளவர்கள் இப்போது கூறத் தொடங்கியுள்ளனர். ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவும் இதனை கூறி வருகின்றார். இதற்கான காரணம் என்னவென்று தெரியுமா?
அதாவது திசை காட்டியின் அரசியல் நாமம் இப்போது சீர்குலைந்து வருகின்றது. இவ்வாறு திசை காட்டி சீர்குலையும் போது அதற்கு காரணமாக நாங்கள் மட்டுமல்ல ஏனைய கட்சிகளை சேர்ந்தவர்களுமே இதனை சீரழித்தனர் என்று கூற வைக்க முயற்சிக்கின்றனர். ஏனைய அரசியல் கட்சிகள் இதனை புரிந்துகொள்ள வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தியும் இது தொடர்பில் ஆழமாக சிந்திக்க வேண்டும் என்றார்.
![]()