இலங்கை

தமிழர் வரலாற்றில் இன்று கறுப்பு நாள்;  நினைவேந்தல் நிகழ்வுகளில் அணிதிரளுமாறு அழைப்பு

முள்ளிவாய்க்காலில் 2009 ஆம் ஆண்டு நடந்த போரின் இறுதிக் கட்டத்தில் தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக படுகொலை செய்யப்பட்ட துயர் தோய்ந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18 பெரும் துயர நாள் இன்று திங்கட்கிழமை தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் அனுஷ்டிக்கப்படுகின்றது.

மே-18 பெரும் துயர நாளின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் இடம்பெறவுள்ளது. காலை 6 மணிதொடக்கம் 9.30மணிவரை முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது உயிர் நீத்தவர்களுக்குரிய பிதிர்க்கடன் நிறைவேற்றும் கிரிகைகள் இடம்பெறவுள்ளன.

அதனைத் தொடர்ந்து முற்பகல்-10.15 மணியளவில் முள்ளிவாய்க்கால் கொள்கைப் பிரகடனம் வெளியீட்டுடன் ஆரம்பமாகும் நிகழ்வில் முற்பகல்- 10.29 மணியளவில் மணி ஒலிக்கப்பட்டு முற்பகல்-10.30 மணியளவில் அக வணக்கம் செலுத்தப்படும். முற்பகல்- 10.31 மணியளவில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு முற்பகல்- 10.35 மணியளவில் மலர் அஞ்சலி நடைபெறும்.

நினைவேந்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அனைவரையும் நினைவேந்தலில் கலந்து கொள்ளுமாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு தமிழ் அரசியல் கட்சிகள்,பொது அமைப்புக்கள், தமிழின உணர்வாளர்களினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .

இன்றைய நாளில் வடகிழக்கு மகாணங்களிலும் ஏனைய இடங்களிலும் கறுப்புக் கொடியைப் பறக்க விடுமாறும் மாலை 6 மணிக்கு வணக்கத் தலங்களில் மணி ஒலித்து வீடுகளில் விளக்கேற்றி அக வணக்கம் செலுத்தி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறும் இய லுமானவரை முள்ளிவாய்க்கால் கஞ்சியையும் பரிமாறி தமிழின அழிப்பை நினைவு கூருமாறும் கோரப்பட்டுள்ளது

தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவரும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் வடகிழக்கு பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவருமான அருட்பணி சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங் கூறுகையில் ,

தமிழின படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதுடன் இந்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் உணர்வுகளோடு அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணைந்து பங்கேற்குமாறு அன்புரிமையுடன் அழைப்பு நிற்கின்றோம்.

நாம் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை சந்தித்த மக்கள். அந்த அநீதிக்கு எதிராக எங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியும், நீதியை கோரியும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் ஒன்றுகூடி கொண்டிருக்கின்றோம். இந்த நிகழ்வுக்கான ஆயத்தப் பணிகளில் பிரதேச மக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பல தரப்பினரும் இணைந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். அவர்களது பங்களிப்பிற்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே அரசியலை கடந்து தமிழ் தேசமாக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். எமது எதிர்ப்பை உறுதியாக பதிவு செய்து, எமது நீதிக்கான குரலை உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும்.
ஆகையால் அனைத்து தமிழ் மக்களும் அணி திரண்டு வந்து இந்த நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்குமாறு முள்ளிவாய்க்கால் பொதுக்கட்டமைப்பு சார்பில் அன்புடன் அழைத்து நிற்கின்றோம் என்றார்.

நாட்டில் சுமார் மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்றுவந்த யுத்தம் கடந்த 2009 ஆம் ஆண்டில் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் மே மாதம் 11 முதல் 18 ஆம் திகதி வரையான ஒரு வாரகாலப்பகுதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமாகவும் மே 18 ஆம் திகதி போரில் உயிரிழந்தவர்களை நினைவுக் கூருவதற்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளாகவும் தமிழ்மக்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

கடந்த ஒரு வாரமாக தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டதுடன் மே-18 பெரும் துயர நாள் நினைவுச் சின்னம் தாங்கிய ஊர்தி பவனிகளும் முன்னெடுக்கப்பட்டன.இதன்போது பெரும்திரளான மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button