இந்தியா

எலெக்‌ஷனோ, கரெக்‌ஷனோ உங்களிடம்தான்! இனி DMK 2.0 – ஸ்டாலின் அதிரடி

தி.மு.க. தொண்டர்களிடம் இருந்து கருத்துகளை பெறுவதற்காக புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

“ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு உங்களிடம் வீடியோ மூலமாக பேசுகிறேன். கடைசியாக தொகுதி மறுவரையறை பற்றி பேசியிருந்தேன். அதைத் தொடர்ந்து தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் வெளியாகின. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு என்னவெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது என்பதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

2 வாரங்களாக எல்லா வீடுகளில் செய்தி சேனல் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. 2026 தேர்தல் முடிவுகளை எடுத்துக் கொண்டால், தி.மு.க. ஒரு பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. அதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். இது நிச்சயமாக நாம் எதிர்பார்த்த முடிவு அல்ல.

இதற்கு அவர் காரணம், இவர் காரணம் என யாரும், யார் மீதும் பழி போடாதீர்கள். ஒரு தலைவராக, இந்த தோல்விக்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன். வெற்றி கிடைக்கும்போது எனக்குதான் புகழ் வந்து சேர்கிறது. அப்படியென்றால், தோல்வி அடையும்போதும் நான்தான் அந்த பழியை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் ஒரு நல்ல தலைவருக்கான இலக்கணம்.

சரி தோற்றுவிட்டோம். அதற்காக அதையே நினைத்துக் கொண்டு முடங்கிவிட மாட்டேன். உடனடியாக அப்டேட் ஆகி மீண்டு வருவேன். நாம் எல்லோருமே அப்படித்தான் வர வேண்டும்.

 

அதற்கு உங்கள் ஆலோசனைகளும், பரிந்துரைகளும் எனக்கு வேண்டும். எலெக்‌ஷனாக இருந்தாலும், கரெக்‌ஷனாக இருந்தாலும் உங்களிடம்தான் வந்தாக வேண்டும். மக்கள்தான் எல்லாம்.

 

இந்த தேர்தல் முடிவுகளுக்கு என்ன காரணம்? தி.மு.க. இன்னும் எப்படியெல்லாம் உழைக்க வேண்டும்? என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை சொல்லுங்கள். உங்கள் கருத்துகளை வெளிப்படையாக சொல்லுங்கள். அதற்காகத்தான் இந்த உடன்பிறப்பின் குரல் இணையதளம்.

 

இதில் உங்கள் கருத்துகளை பதிவிடுவது மிகவும் எளிது. உங்கள் குரலில் பேசி கருத்துகளை சொன்னால் அதுவே டைப் ஆகிவிடும். நேரடியாக நீங்களே டைப் செய்தும் சொல்லலாம். இல்லையெனில், ஒரு பேப்பரில் உங்கள் கருத்தை எழுதி அந்த புகைப்படத்தை பதிவேற்றம் செய்யலாம். உங்கள் கருத்துகள் என்னிடம் வந்து சேர்ந்துவிடும். அதையெல்லாம் படித்து, பரிசீலனை செய்து நமது அடுத்தகட்ட நடவடிக்கையை வடிவமைக்கப் போகிறேன்.

 

நம்முடைய அணுகுமுறை, சிந்தனை, செயல்பாடு எல்லாவற்றையும் மாற்றியாக வேண்டும். காலத்திற்கு ஏற்றவாறு evolve ஆக வேண்டும். உங்கள் கருத்துகளின் அடிப்படையில் தி.மு.க. 2.0 வரும். கட்சியின் அனைத்து நிலைகளிலும் தேவையான மாற்றங்களை செய்யப்போகிறேன். இதனால் அடுத்த 100 ஆண்டுகளுக்கும் இந்த இயக்கம் உயிர்ப்போடு இயங்கும். உங்களுக்காக இயங்கும். உடன்பிறப்பே, நீங்கள் சொல்லுங்கள், நான் கேட்கிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button