இந்தியா

நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும் வெற்றி; முதல் தடையைத் தாண்டிய தமிழக முதலமைச்சர் விஜய்; ஆதரவாக 144 வாக்குகள், எதிராக 22 வாக்குகள்

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் பதிவாகிய அதேவேளை, 5 பேர் நடுநிலை வகித்தனர்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிட்ட விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 107 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், தனித்து ஆட்சி அமைக்கும் அறுதிப் பெரும்பான்மை பலமான 118- உறுப்பினா்களின் ஆதரவு இல்லாத நிலையில், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் முதல்வராக விஜய் கடந்த 10-ஆம் திகதி பதவியேற்றாா். அவரது அமைச்சரவையில் 9 அமைச்சா்களும் பதவியேற்றனா்.

மே 13-ஆம் திகதிக்குள் பேரவையில் முதல்வா் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்த நிலையில், அதன்படி தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் நேற்று புதன்கிழமை கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற்றது.

தவெக அரசின் மீதான நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானத்தை நேற்று புதன்கிழமை முதல்வர் ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் கொண்டு வந்தார்.இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ் குமார், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. செல்லசுவாமி, விசிக எம்.எல்.ஏ. வன்னியரசு, ஐயுஎம்எல் எம்.எல்.ஏ ஷாஜகான், சிபிஐ எம்.எல்.ஏ. தளி ராமசந்திரன் உள்ளிட்டோர் நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்கள். அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட மன்னார்குடி எம்.எல்.ஏ.வும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தார்.

பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன், பாமக எம்.எல்.ஏ. செளமியா அன்புமணி உள்ளிட்டோர் வாக்கெடுப்பில் நடுநிலை வகிக்கப் போவதாக தெரிவித்தனர்.

தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த், மஜக எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் அரசுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்தனர்.இதேவேளை, தவெக அரசைக் கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், வாக்கெடுப்பை புறக்கணித்து திமுக வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவை அவைக் கதவுகள் மூடப்பட்டு, பகுதிவாரியாக ஆறு பிரிவுகளாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எண்ணிக் கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்ததனையடுத்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் ஒவ்வொரு பகுதிகளாக ஒவ்வொரு உறுப்பினரின் பெயரையும் குறிப்பிட்டு சபாநாயகர் அழைத்தார். இதில் முதலில் தீர்மானத்தை ஆதரிப்போர் எழுந்து நிற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. அடுத்ததாக எதிர்ப்பு தெரிவிப்போர், நடுநிலை வகிப்போர் எழுந்து நிற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். இதன் அடிப்படையில் நம்பிக்கை தீர்மானத்துக்கான வாக்குகள் எண்ணப்பட்டன.

இந்த தீர்மானத்தில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி ஆதரவு தெரிவித்தது. பாமக, பாஜக வாக்கெடுப்பில் நடுநிலை வகித்தது.

இதன் அடிப்படையில் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் பதிவாகின. 5 பேர் நடுநிலை வகித்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதேவேளை, பெரும்பான்மையை நிரூபிப்பதில் விஜய்க்கு, அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான ஒருதரப்பு எம்எல்ஏக்கள் ஆதரவளிப்பதாக அறிவித்தனர். பழனிசாமி தரப்பில் 22 பேரும், எஸ்.பி.வேலுமணி தரப்பில் 25 பேரும் உள்ளனர். இப்படியாக அதிமுக பிரிந்துள்ளது அக்கட்சிக்கும், எடப்பாடி பழனிசாமியின் தனிப்பட்ட அரசியல் எதிர்காலத்துக்கும் பேரிடி என அரசியல் நிபுணர்கள் கணிக்கின்றனர்.

இந்த அரசு சிறுபான்மை அரசுதான்”

நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் பேச்சு

“இந்த அரசை சிறுபான்மை அரசு என்று யாரும் நினைத்தால் அதிலும் எங்களுக்கு மகிழ்ச்சியே. நாங்களே சொல்கிறோம், இது சிறுபான்மை அரசுதான். சிறுபான்மை மக்களுக்கான பாதுகாப்பை உண்மையாக நிலைநாட்டும் அரசுதான்” என நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற பின்னர் முதல்வர் விஜய் பதிலுரை வழங்கினார்.

“முதலில், நம்பிக்கை தீர்மானத்தில் மக்களுக்கான இந்த ஆட்சியை மனசாட்சி உள்ள மக்களாட்சியை ஆதரித்து வெற்றி பெற செய்த உறுப்பினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை நமது அரசின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் எந்த அணியும் இல்லாமல் தனி அணியாக, தனி சிறப்புமிக்க அணியாக, மக்கள் அணியாக, மக்களை விரும்பும் அணியாக, மக்கள் விரும்பும் அணியாக களம் கண்டோம்.

1967 மற்றும் 1977 தேர்தல்கள் வாயிலாக அமைந்த சாமானியர்களின் அரசை போலவே 2026 சட்டமன்ற தேர்தல் வாயிலாக தமிழக வெற்றிக் கழகமும் சாமானியர்களின் அரசையே அமைக்கும் என்று மக்களிடம் தீர்மானமாக கூறினோம். மக்களும் நம் மீது நம்பிக்கை வைத்து தீர்மானமாக வாக்களித்தனர். வாகை சூடும் அந்த வரலாறு திரும்பியது. விசில் அலை வெற்றி அலையாக மாறியது. ஒரு விரல் புரட்சி – விசில் புரட்சியானது.

கட்சி ஆரம்பித்த மூன்றே ஆண்டுகளுக்குள் 34.92 சதவிகிதத்துடன் ஒரு கோடியே 72 லட்சத்து 26 ஆயிரத்து 208 வாக்குகளை மக்கள் தந்தனர். தமிழக வெற்றிக் கழகத்தை தனிப்பெரும் கட்சியாக சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர். கட்சி ஆரம்பித்த மூன்று ஆண்டுகளுக்குள்ளேயே மிக மிக சிறிய அளவில். ஒரு நூலிழையில் தனிப்பெரும்பான்மை கொஞ்சம் தள்ளிப் போயிருக்கிறது. அதனால், இந்த அரசை சிறுபான்மை அரசு போல யாரும் நினைத்தால், அதிலும் எங்களுக்கு மகிழ்ச்சியே. நாங்களே சொல்கிறோம். இது சிறுபான்மை அரசுதான். சிறுபான்மை மக்களுக்கான பாதுகாப்பை உண்மையாக நிலைநாட்டும் அரசுதான்.

அதுமட்டுமல்ல, பெண்கள், குழந்தைகள், முதியோர்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினர் என அனைத்து மக்களுக்குமாக அமைந்த அரசுதான் இந்த அரசு. அந்த நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட்டதால்தான் இந்த நம்பிக்கை தீர்மானத்தில் அது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

எம்மதமும் நம் மதமே. எல்லா மக்களும் நம் மக்களே. இதில் வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்ற பாகுபாடே இருக்காது. இது எல்லோருக்குமான அரசு. இது சாமானியர்களுக்கான அரசு. இது சாதி, மத எல்லைகளை கடந்த அரசு. இது பாகுபாடு காட்டாத அரசு. இது பண்பாடு காக்கும் அரசு. இது பண்பட்ட அரசு. அரசியல் காரணங்களுக்காக யாரையும், எதற்காகவும் புண்படுத்தாத அரசு. இதை எல்லாம் போகப்போக புரிந்து கொள்வார்கள்.

எனவே, துள்ளி எழுந்து பதில் சொல்வதை விட எதிலும் துணிச்சலுடன் செயலாற்றி வெற்றி பெறும் அரசு. இது பதவிக்காக, அதிகாரத்துக்காக அமைந்த அரசு அல்ல. நம்பிய மக்களுக்கு நன்றி கடன் செலுத்துவதற்காக அமைந்த அரசு. அதிகாரம் காட்டி மிரட்டும் அரசு அல்ல. அனைவரையும் அரவணைக்கும் அரசு. எவர் மீதும் வெறுப்பு காட்டும் அரசு அல்ல. எல்லோரையும் விரும்பும் அரசு. மக்களே முக்கியம். மக்கள் நலன் மட்டுமே முக்கியம். அதுவே எங்கள் ஒரே நிலைப்பாடு. எனவே, மனசாட்சி உள்ள மக்களாட்சிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் மீண்டும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பதிலுரையில் முதல்வர் விஜய் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button