முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்விடம் இன்று விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வாக்குமூலமளிப்பதற்காக இன்று செவ்வாய்க்கிழமை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் 2013 ஆம் ஆண்டு இடம்பெற்றதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கும் வாக்குமூலமளிப்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நேற்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளதாவது,
விசாரணைக்கு வருமாறு அழைக்கப்படும் எந்த நேரத்திலும் நாங்கள் செல்வோம். எவ்வாறாயினும் அரசாங்கம் ஒன்றை புரிந்துகெர்ள வேண்டும். அச்சுறுத்தல்களை விடுத்து, அழுத்தங்களை கொடுத்த இந்த பயணத்தை மேற்கொள்ள முடியாது. ஆனால் எங்களுடைய குற்றமற்ற தன்மையை நிரூபிக்க சிறந்த ஒன்று விசாரணை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகும். அதேபோன்று விசாரணை நடவடிக்கைகளில் பலவந்தமாக வாக்குமூலஙகளை பதிவு செய்யும் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்தினால் நியாயம் இருக்காது. இறுதியில் அதன் நஷ்டத்தை இந்நாட்டு மக்களுக்கே செலுத்த வேண்டி வரும். மக்களை ஏமாற்றவே அவ்வாறு செய்கின்றனர் என்றார்.
![]()