இலங்கை

கபிலவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தே வாக்குமூலம் பெறப்பட்டது; பல உண்மைகளை விரைவில் பகிரங்கப்படுத்துவோம்

ஸ்ரீ லங்கா விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரியான கபில சந்திரசேனவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டே வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. பல விடயங்களை திரட்டியுள்ளோம். வெகுவிரைவில் உண்மையை நாட்டுக்கு பகிரங்கப்படுத்துவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

ஸ்ரீ லங்கா விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரியான கபில சந்திரசேனவின் மரணம் குறித்து எமக்கு பாரிய சந்தேகம் உள்ளது. எயார் பஸ் கொள்வனவு விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஷ மற்றும் நாமல் ராஜபக்சவின் பெயரை குறிப்பிடுமாறு அவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டே வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
எனவே கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பில் பல விடயங்களை திரட்டியுள்ளோம். வெகுவிரைவில் உண்மையை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்துவோம்.

30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து, நாட்டை அபிவிருத்தியடையச் செய்த மஹிந்த ராஜபக்சவை இவ்வாறு நெருக்கடிக்குள்ளாக்குவது பெரும் தவறு.அரசாங்கத்தின் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்.

கடந்த கால அரசாங்கங்கள் மற்றும் ஆட்சியாளர்களை விமர்சித்துக் கொண்டு தமது இயலாமையை அரசாங்கம் மூடிமறைத்து வருகின்றது .நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு எவ்விதத்திலும் தீர்வு வழங்கப்படவில்லை என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button