உலகம்

கனடாவில் தமிழ் அரசியல்வாதிக்கு எதிராக விசாரணை!

கனடாவின் டொராண்டோ மாநகர சபையில் ஸ்கார்பரோ தென்மேற்கு தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதியான பார்த்தி கந்தவேல் மீது ஒன்டாரியோ மாகாண காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

காவல்துறை தன் மீது விசாரணையை மேற்கொள்வதாகத் தெரிந்ததும் தான் “மிகுந்த ஆச்சரியமடைந்ததாக” பார்த்தி கந்தவேல் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் எவை என்பது குறித்த தெளிவான தகவல்கள் இன்னும் தெரியவில்லை என்றும், அது குறித்து தான் ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு கடினமான செய்தி என்பதை நான் உணர்கிறேன். இந்தச் சூழலை விரைவில் முடிவுக்கு கொண்டுவர நான் பணியாற்றி வருகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

ஸ்கார்பரோ தென்மேற்கு மக்களின் நம்பிக்கையைப் பெற நான் கடுமையாக உழைத்திருக்கிறேன், அதை நான் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

2023-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மாநகர சபை உறுப்பினரான பார்த்தி கந்தவேல், அதற்கு முன்பாக டொராண்டோ மாவட்ட பாடசாலை சபையின் (TDSB) அறங்காவலராக நீண்ட காலம் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியலில் எப்போதும் மிக உயர்ந்த தார்மீக நெறிமுறைகளையும் நேர்மையையும் பேணவே நான் முயற்சி செய்துள்ளேன். அதற்கு மாறான எந்தக் குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்” என அவர் உறுதியளித்துள்ளார்.

டொராண்டோ காவல்துறையினரின் பரிந்துரையின் பேரிலேயே மாகாண காவல்துறை இந்த விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், விசாரணை எதைப் பற்றியது என்ற விவரங்களை வெளியிட காவல்துறை மறுத்துவிட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button