இந்தியா

தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக ஒலிக்கப்பட்டது ஏன்? ; ஆதவ் அர்ஜுனா விளக்கம்

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்பட்டமை குறித்துத் தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விரிவான விளக்கமளித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பும் 36 எம்எல்ஏக்கள்? தவெகவுக்கு ஆதரவளிக்க திட்டம்?
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பும் 36 எம்எல்ஏக்கள்? தவெகவுக்கு ஆதரவளிக்க திட்டம்?
இனிவரும் காலங்களில் பழைய நடைமுறையே பின்பற்றப்படும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் வழக்கமான நடைமுறைப்படி, அரச நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படுவதே மரபாகும்.

ஆனால், இன்றைய பதவியேற்பு விழாவில் முதலில் ‘வந்தே மாதரம்’, இரண்டாவதாக’தேசிய கீதம்’, மூன்றாவதாகவே ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ இசைக்கப்பட்டது.

இந்த மாற்றம் தமிழகத்தின் பண்பாட்டு உணர்வுகளுக்கு ஒவ்வாதது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ஆளுநர் தரப்பிடம் அரசு சார்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது, மத்திய அரசின் புதிய சுற்றறிக்கையின்படி செயல்பட வேண்டிய கடமை ஆளுநருக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

அந்தத் தவிர்க்க முடியாத சூழலிலேயே இன்று இத்தகைய நடைமுறை பின்பற்றப்பட்டதாக அவர் விளக்கமளித்தார்.

“தாய்த் தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்படுவதில் தமிழக அரசுக்கு உடன்பாடில்லை” என்று தெரிவித்துள்ள ஆதவ் அர்ஜுனா, இனிவரும் காலங்களில் இந்த புதிய நடைமுறை பின்பற்றப்படாது என்றும், நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழி வாழ்த்துப் பாடல்களே நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், இதற்கான உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதுவே ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வு மற்றும் அரசின் உறுதியான நிலைப்பாடு என்றும் அவர் தனது விளக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button