சுரேஷ் சலே போன்றவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம் ; அரசாங்கம் முற்றாக தனது பொறுப்பிலிருந்து தவறியுள்ளது

நாட்டின் தற்போதைய மர்ம மரணங்கள் மற்றும் அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல்கள் காரணமாக மக்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றனர். அந்த வகையில் தற்போதைய சூழலில் சுரேஷ் சலே போன்ற புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி ஒருவர் வெளியில் வந்தால் அவரின் பாதுகாப்பு எவ்வாறு அமையும் என்ற கேள்வி எழுகிறது. சட்டமும் நீதியும் நேர்மையாக நிலைநாட்டப்படாத பின்னணியில் அரசாங்கம் தனது பொறுப்பிலிருந்து முற்றிலும் தவறியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கடுமையாகக் குற்றம் சாட்டினார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்ற அதிகாரியின் மர்ம மரணம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சட்டமும் நீதியும் சரியாக, நேர்மையான முறையில் நிலைநாட்டப்பட்டால் எவரும் இத்தகைய விபரீத முடிவுகளை எடுக்க நினைப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட உடனேயே எவரும் தற்கொலை செய்துகொள்ள முயல்வதில்லை.
முதலில் நிதி அமைச்சின் மேலதிக பணிப்பாளரின் மரணம் உண்மையாகவே தற்கொலையா இல்லையா என்ற பாரிய சந்தேகம் சமூகத்தில் எழுந்துள்ளது. அத்தோடு, தற்போதைய சம்பவத்தைப் பார்க்கும்போதும், அது மேலோட்டமாக தற்கொலை போன்று தெரிந்தாலும் அதிலும் பல்வேறு சந்தேகங்கள் காணப்படுகின்றன.
இந்த அரசாங்கம் தனது அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதனால் நாட்டு மக்கள் மிகவும் பாதுகாப்பற்ற, மன உளைச்சலுக்கு ஆளான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இவ்வாறானதொரு பின்னணியில், சுரேஷ் சலே போன்ற புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி ஒருவர் வெளியில் வந்தால் அவரின் பாதுகாப்பு எவ்வாறு அமையும் என்ற கேள்வி எழுகிறது.
அவரின் உயிருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுகிறது என்பதையே இந்தச் சம்பவங்கள் காட்டுகின்றன. ஒருவேளை அவருக்கு பிணை கிடைத்தாலும் கூட, அடுத்து என்ன நடக்கும் என்ற அச்சமும் சந்தேகமும் எழுவதைத் தடுக்க முடியாது.
அடுத்ததாக, விசாரணை ஆணைக்குழுவின் விவகாரம் தொடர்பில் கவனம் செலுத்தும் போது, எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலர் இந்த ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கத் தயாராக இருக்கிறார்கள். நான் தனிப்பட்ட முறையில் அங்கு சாட்சியமளிக்கச் செல்வதா இல்லையா என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. இவர்கள் யாரை சிறையிலடைக்க வேண்டும் என்ற பட்டியலை வைத்துக் கொண்டு அதை மட்டுமே வாசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.
![]()