இலங்கை

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ள எமது இளைஞர், யுவதிகளது பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்

நாட்டில் போதுமான பொருளாதார வசதி இல்லாததாலேயே எமது இளைஞர்,யுவதிகள் கட்டார்,டுபாய் போன்ற நாடுகளுக்கு தொழில் புரிகின்றார்கள்.அவர்கள் இந்த நாட்டில் பொருளாதார மேம்பாட்டுடன் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த மக்கள் பிரதிநிதிகள் ஆகிய நாம் தவறிவிட்டோம் .குறைந்த பட்சம் அவர்களின் பாதுகாப்பையேனும் அங்கு உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யுமான இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  இடம் பெற்ற புலம்பெயர்ந்த ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண சட்ட அதிகாரத்துடனான அலகு ஒன்றை தாபித்தல் தொடர்பான தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

இலங்கையில் பல்வேறு இன்னல்களுக்கு முகங் கொடுத்ததன் பின்னர் தான் இளைஞர், யுவதிகள் நாட்டை விட்டுச் செல்ல தீர்மானிக்கிறார்கள். அங்கு சென்றதன் பின்னரும் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கிறார்கள்.

ஆடு ஜீவிதம் எனும் திரைப்படம் ஒன்றுள்ளது .இளைஞர், யுவதிகள் தொழிலுக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று அங்கு முகங்கொடுக்கும் பிரச்சினைகள் இந்த படத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளன .இலங்கையிலும் அவ்வாறான பிரச்சினைகள் உள்ளன .

அமெரிக்கா, கனடா உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கு வசதி படைத்தவர்களே செல்வார்கள்.ஆனால் எமது வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ளோர் இந்த நாட்டில் வாழ முடியாத நிலை ஏற்பட்டதன் பின்னர் தான் தொழிலுக்காக வெளிநாடு செல்வார்கள். அவ்வாறு செல்லும் போது அவர்களின் பெற்றோரின் அஸ்வெசும கொடுப்பனவும் இரத்துச் செய்யும் நிலை காணப்படுகிறது.

வெளிநாடுகளுக்கு செல்லும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு, சட்ட அலகு ஒன்றை ஸ்தாபிப்பது அவசியம்.சுற்றுலா விசாவில் தொழிலுக்காக வெளிநாட்டுக்கு செல்ல கூடாது என்ற அடிப்படை கூட ஒருசிலருக்கு தெரியாது. அவர்களின் அறியாமையை ஒருசிலர் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கும் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.போலி வெளிநாட்டு முகவர்கள் பற்றி அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.விசா காலம் முடிவடைந்த பின்னரும் பெண்கள் தொழிலுக்கு அமர்த்தப்படுகிறார்கள்.பல சித்திரவதைகளுக்கும் உள்ளாகுகின்றார்கள்.

இந்த நாட்டில் போதுமான பொருளாதார வசதி இல்லாத காரணத்தால் தான் எமது இளைஞர்,யுவதிகள் கட்டார்,டுபாய் போன்ற நாடுகளுக்கு சென்று தொழில் புரிகிறார்கள்.அவர்கள் இந்த நாட்டில் பொருளாதார மேம்பாட்டுடன் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த மக்கள் பிரதிநிதிகள் ஆகிய நாம் தவறிவிட்டோம் .குறைந்தப்பட்சம் அவர்களின் பாதுகாப்பையேனும் அங்கு உறுதிப்படுத்த வேண்டும்.

வங்குரோத்து நிலையில் இருந்து நாடு விடுபடவில்லை.வெளிநாட்டு வருவாய் ஊடாகவே பொருளாதாரம் தற்போது பாதுகாப்பாகவுள்ளது.வெளிநாடுகளில் வாழும் இலங்கை இளைஞர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.அவர்களின் சடலங்களை கூட நாட்டுக்கு கொண்டுவருவதில் பிரச்சினை காணப்படுகிறது.இந்த பிரச்சினைகள் பற்றி அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button