விஜய்க்கு ஆதரவாக பேசிய அர்ச்சுனா ஒரு பைத்தியக்காரன்!; தேரர் விடுத்த கடும் எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தை ஆளுவதற்கு தமிழக நடிகர் விஜயை, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அழைப்பதானது சிங்கள மக்களின் பொறுமையைச் சோதிக்கும் செயல் என்று ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முப்பது வருட கால யுத்தத்தில் முப்படைகளும் உயிரைப் பணையம் வைத்தே வடக்கை மீட்டெடுத்தன. அந்த இருண்ட காலத்தை மீண்டும் உருவாக்க முற்பட வேண்டாம். சிங்கள மக்கள் வீதிக்கு இறங்கினால் எவரும் தப்ப முடியாது.
பாராளுமன்றத்தில் விஜய்க்கு ஆதரவாக பேசிய அர்ச்சுனா ஒரு பைத்தியக்காரன். இதே கருத்துகளை அவர் வெளியில் பேசியிருந்தால் வீதியில் கூட நடமாட முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தளபதி விஜய்! எங்கள் நாட்டை நோக்கி விரல் நீட்ட வேண்டாம். நீங்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சர்தான்; முழு இந்தியாவின் தலைவரோ பிரதமரோ அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், “இலங்கையின் உள்நாட்டுச் செயல்பாடுகளில் தலையிட முயன்றால், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தக்க பதிலடி கொடுப்போம்” என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் மத்திய வங்கியின் உதவிப் பணிப்பாளர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார் என்று நாடாளுமன்றத்தில் வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்ட தேரர், இது உண்மையானால் அரசு உடனடியாகப் பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இது 1988, 1989 காலப்பகுதியின் அடக்குமுறைகளை நினைவுபடுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மூன்று வேளை உண்ட மக்கள் இன்று இரண்டு வேளை மட்டுமே உண்ணும் அவலநிலை கிராமங்களில் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்களின் விலை வானைத் தொடுகின்றது.
ராஜபக்ஷக்களின் பணம் உகாண்டாவில் இருப்பதாகக் கூறியவர்கள், இப்போது ஏன் அதை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை? தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்தபடி இளைஞர்களுக்கோ, பல்கலைக்கழக மாணவர்களுக்கோ வேலைவாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
சிங்களப் புத்தாண்டு போன்ற கலாசார நிகழ்வுகளைப் புறக்கணிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, கோயில்களுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபடுகின்றார். மக்களின் வரிப்பணத்தில் வாழ்பவர்கள் இன்று மக்களின் இரத்தத்தையே உறிஞ்சிக் குடிக்கின்றார்கள்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் இருக்க வேண்டியவர்கள் இன்று வெளியில் உலவுகின்றார்கள் என்றும், அரசு சிங்கள மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதில்லை என்றும் குற்றம் சுமத்திய சீலரத்ன தேரர், பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து அரசுக்கு எதிராகப் போராடப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.
![]()