இலங்கை

பழைய ‘பிக்பொக்கெட்’ முறை போய் இப்போது ‘ஹேக்கர்’ முறை கொள்ளை- அரசைக் கடுமையாகச் சாடிய நாமல்!

இலங்கையில் தற்போது அரங்கேறி வரும் பாரிய நிதி மோசடிகள் மற்றும் அரசின் நிர்வாகத் திறமையின்மை குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ கடும் சாடல்களை முன்வைத்துள்ளார்.

ஹொரணையில்  நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், தற்போதைய அரசை “ஹேக்கர்களின் அரசு” என்று வர்ணித்தார்.

“நிதி அமைச்சின் செயலாளர் ஒருவரின் செயற்பாட்டால் 80 கோடி ரூபாவுக்கும் அதிகமான மக்கள் பணம் மாயமாகியுள்ளது.

டொலரின் மதிப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்த இழப்பின் பெறுமதி இன்னும் பல மடங்காகும். இவ்வளவு பெரிய தொகை கொள்ளையடிக்கப்பட்டும், நிதி அமைச்சரான ஜனாதிபதியும், மத்திய வங்கியும் இன்னும் உறக்கத்தில் இருப்பது வேடிக்கையாக உள்ளது.” என்றும் அவர் தெரிவித்தார்.

அரசின் மீதான ஊழல் பட்டியலை வரிசைப்படுத்திய நாமல் ராஜபக்ஷ, பின்வரும் விடயங்களைச் சுட்டிக்காட்டினார்.

* தனியார் வங்கி ஒன்றில் 13 பில்லியன் ரூபா திருடப்பட்டமை.

* தபால் திணைக்களம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிதி கையாடல்.

* துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் மாயமாகியுள்ளமை.

“பழைய ‘பிக்பொக்கெட்’ முறையைத் தாண்டி, இப்போது அதிநவீன ‘ஹேக்கர்’ முறையூடாக அரசு மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கின்றது” என்றும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

கச்சதீவு விவகாரத்தில் இந்தியாவோ அல்லது எந்தவொரு மாநில முதலமைச்சரோ இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்ட விடயங்களில் தன்னிச்சையாகத் தீர்மானம் எடுக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை ஜனாதிபதியும் நீதி அமைச்சரும் மேடைகளில் பேசி அரசியல் மயப்படுத்துவது வெட்கக்கேடானது என்றும் அவர் சாடினார்.

“மணிக்கு 1000 கிலோமீற்றர் வேகத்தில் நாட்டை நகர்த்துவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று ரயிலின் வேகத்தை 20 கிலோ மீற்றராகக் குறைத்துள்ளனர். மஹிந்த ராஜபக்ஷவின் காலத்துக்குப் பிறகு ரயில் பாதைகளைப் புனரமைக்க எந்தத் திட்டமும் இல்லை. மழையினால் சேதமடைந்த பாதைகளைக் கூட திருத்த முடியாத கையாலாகாத அரசாக இது உள்ளது.” என்றும் அவர் கேலி செய்தார்.

அரசின் ஊழல்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறைப்பாடுகள் செய்யுமளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது என்றும், பொய்ப் பிரச்சாரங்களுக்கு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள் என்றும் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தனது உரையில் மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button