சில மலையகச் சம்பவங்களை பூதாகரமாக்குகின்றனர்; அமைச்சர் சந்திரசேகர் சீற்றம்

மலையகத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் ஒரு சில சம்பவங்களை பூதாகரமாக்கும் செயற்பாடுகளில் மலையக அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றம்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமைஇடம்பெற்ற பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளையின் கீழான அவசரகால சட்டத்தை நீட்டிக்கும் வர்த்தமானி அறிவித்தல் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டிய அவர் மேலும் பேசுகையில்,
கடந்த சில நாட்களில் மலையகப் பகுதிகளில் மூன்று சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. ராகலை டெல்மார் தோட்டத்தில் தோட்ட அதிகாரிக்கும் மக்களுக்கும் இடையில் நிலவிய பிரச்சினைக்கு நேற்று தீர்வு காணப்பட்டுள்ளது எமது தொழிற்சங்கத்தினர் தலையிட்டு அதனை தீர்த்து வைத்துள்ளனர். எமது தொழிற்சங்கத்தினர்,பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் இணைந்து கலந்துரையாடி அந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
மஸ்கெலியா மொக்கா தோட்டத்திலும் ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பந்தப்பட்ட தொட்ட அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். அந்த பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது.
அத்துடன் நீலகாமம் தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டதில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.மலையகத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் ஒரு சில சம்பவங்களை பூதாகாரமாக்கும் செயற்பாடுகளில் மலையக அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன .
கடந்த கால பிரச்சினைகள் தொடர்பில் பேசக்கூடாது என சிலர் கூறுகின்றனர். ஆனால் அது மறக்கக் கூடிய பிரச்சினையல்ல. அந்த மக்களின் பிரச்சினைகள் கடந்த காலங்களில் தீர்க்கப்படவில்லை. அதனால் அந்தப் பிரச்சினைகள் பூதாகாரமாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததன் பின்னர் புதிய முறையில் அந்த பிரச்சினைகளை அணுகினோம். அந்த வகையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு வரலாற்றில் அரசாங்கம் சம்பள அதிகரிப்பை வழங்கியதாக எந்த பதிவுகளும் இல்லை. இந்தத் தடவை தான் கம்பெனிகள் 200 ரூபா அரசாங்கம் 200 ரூபா என400 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அவர்கள் அரசாங்கத்திற்கு பெரும் வரவேற்பை பெற்றுத் தந்துள்ளனர்.
நாட்டில் தற்போது செயலிழந்து போன கட்சிகளாக மாறியுள்ள எதிர்க்கட்சிகள் இத்தகைய சம்பவங்களை வைத்து மலையக மக்களுக்கு இடையில் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்கின்றன. இவ்வாறு செயலிழந்தவர்கள் இறுதியாக கையில் எடுக்கும் நடவடிக்கை இனவாதமும் மதவாதமுமாகும்.அத்தகைய நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்றார்.
![]()