முச்சந்தி

தையிட்டியில் சட்டவிரோத விகாரைப் பகுதியைப் பார்வையிட்ட யாழ். ஆயர்

யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் பொது மக்களின் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விகாரைப் பகுதியை, யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை நேற்று முன்தினம் புதன்கிழமை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

தையிட்டியில் பொதுமக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து இந்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, நிலத்தின் உரிமையாளர்கள் நீண்டகாலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விகாரையை அகற்றித் தங்களது காணிகளை மீள ஒப்படைக்க வேண்டும் என்பதே இவர்களது பிரதான கோரிக்கையாக உள்ளது.

நிலத்தை விடுவிப்பதற்கான முதற்கட்டமாக காணி அளவீட்டுப் பணிகளை முன்னெடுக்க மாவட்ட நிர்வாகம் பலமுறை முயற்சித்தது. எனினும், அதிகாரிகளின் செயற்பாடுகளில் நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்து நில உரிமையாளர்கள் எதிர்ப்பு வெளியிட்டதால், அளவீட்டுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.இதனால் அப்பகுதியில் தொடர்ந்தும் பதற்றமான சூழலே காணப்படுகின்றது.

இவ்வாறானதொரு இழுபறி நிலைக்கு மத்தியில், தையிட்டிப் பகுதிக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை சென்ற யாழ். ஆயர், விகாரை அமைந்துள்ள பகுதி மற்றும் மக்களின் காணிகளை பார்வையிட்டார்.

மக்களின் நீண்டகாலப் போராட்டம் மற்றும் தற்போதைய கள நிலவரங்கள் குறித்து இதன்போது அவர் கேட்டறிந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button