சுரேஷ் சலேவின் ரிட் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள தடுப்புக்காவல் உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு (07) மேன்முறையீட்டு நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், இந்த மனுவை முன்னெடுத்துச் செல்வதற்குள்ள சட்டப்பூர்வத் தன்மை குறித்து ஆரம்பகட்ட ஆட்சேபனைகளை முன்வைக்க எதிர்பார்ப்பதாக நீதிமன்றிற்குத் தெரிவித்தார்.
மனுதாரரான சுரேஷ் சலே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் அல்லது குழுக்களின் எந்தவொரு விசாரணையிலும், இந்தத் தாக்குதலுடன் தனது கட்சிக்காரருக்குத் தொடர்பிருப்பதாக எவ்வித சாட்சியங்களும் முன்வைக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.
2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் 30ஆம் திகதி வரை தனது கட்சிக்காரர் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பாதுகாப்பு பாடநெறி ஒன்றில் கலந்துகொண்டிருந்ததால், தாக்குதல் நடந்த சமயத்தில் அவர் இலங்கையில் இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
வெளிநாட்டில் வசிக்கும் அசாத் மௌலானா என்பவர் பிரித்தானியாவின் ‘செனல் 4’ ஊடகத்திற்கு வழங்கிய கருத்தின் அடிப்படையிலேயே தனது கட்சிக்காரருக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட சட்டத்தரணி, அசாத் மௌலானாவின் கூற்றுக்களுக்கு எவ்வித சாட்சியப் பெறுமதியும் இல்லை எனத் தெரிவித்தார்.
அசாத் மௌலானா இலங்கையின் நீதிமன்றக் கட்டமைப்பு சீரழிந்ததாக விமர்சித்ததன் மூலம் நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி, அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் தாக்கல் செய்யப்படவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.
அத்துடன், தனது கட்சிக்காரர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஆறாவது மாடியில் மனிதர்கள் தங்குவதற்குப் பொருத்தமற்ற சிறிய அறையொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஒரு பழமையான கட்டிடம் என்பதால் அங்குள்ள அதிகாரிகளே குறைந்தபட்ச வசதிகளுடன்தான் பணியாற்றி வருவதாகக் கூறினார்.
எவ்வாறாயினும், ஒவ்வொரு நபரும் கௌரவமான முறையில் நடத்தப்பட வேண்டியது அவசியம் எனச் சுட்டிக்காட்டிய மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், விடயம் குறித்து பிரதிவாதிகள் கவனம் செலுத்த வேண்டும் எனப் பிரதி சொலிசிட்டர் ஜெனரலுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் குறித்த மனு மீதான மேலதிக விசாரணைகள் ஜூன் மாதம் 04ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.
![]()