இந்தியா

ஆட்சி அமைக்க விஜய்க்கு அழைப்பு விடுக்காத ஆளுநர்?; பெரும்பான்மையைப் பெற்ற பின்பே பதவியேற்பாரா?

தமிழகத்தில் அடுத்த ஆட்சியை அமைப்பதற்கான பெரும்பான்மைக்குத் தேவைப்படும் 118 எம்.எல்.ஏ.க்கள் குறித்த தகவலை ஆளுநருக்கு தவெக தலைவர் விஜய் நேற்றைய சந்திப்பில் வழங்காததால், திட்டமிட்டபடி அவர் இன்று (மே 7) முதல்வராக விஜய் பதவியேற்பாரா என்ற கேள்வி இந்த செய்தி எழுதப்படும்வரை (நேற்று மாலை) எழுந்துள்ளது.

ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் ராஜேந்திர அர்லேகருக்கு விஜய் நேற்று முன்தினம் இ-மெயில் மூலம் கடிதம் அனுப்பி இருந்தார். அதில், நடந்து முடிந்த தேர்தலில் தவெக 35% வாக்குகளை பெற்றிருப்பதை சுட்டிக்காட்டி, தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஆட்சி அமைக்க ஆதரவு தருபவர்கள் யார் யார் என்பது குறித்த விவரத்தை அளிக்குமாறு விஜய்க்கு, ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தொலைபேசி மூலம் பேட்டி அளித்த ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், “பெரும்பான்மைக்கு 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. அது குறித்த விவரம் தெரிவிக்கப்பட வேண்டும். அரசியலமைப்பின் அடிப்படையில் எனது செயல்பாடு இருக்கும்” என்று அவர் கூறி இருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, கட்சியின் மூத்த தலைவர்களுடன் நேற்று மாலை 3.30 மணி அளவில் ஆளுநர் மாளிகைக்கு சென்ற விஜய், ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை சமர்ப்பித்தார்.

எனினும், அதில் போதிய உறுப்பினர்களின் ஆதரவு இருப்பது குறித்த விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆட்சி அமைக்க விஜய்க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

காங்கிரஸ், சி.பி.ஐ, சிபிஎம், விசிக ஆகிய கட்சிகளின் ஆதரவை விஜய் கோரி இருந்த நிலையில், காங்கிரஸ் கட்சி மட்டும் தனது ஆதரவை நேற்று உறுதிப்படுத்தியது. அக்கட்சிக்கு 5 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். எனினும், மற்ற மூன்று கட்சிகளும் தங்கள் முடிவை (இந்த செய்தி எழுதப்படும்வரை) அறிவிக்கவில்லை. அக்கட்சிகள் தலா 2 எம்.எல்.ஏக்களைக் கொண்டுள்ளன. அவற்றின் ஆதரவு உறுதியாகுமானால் விஜய் பெரும்பான்மை பலம் இருப்பதற்கான ஆதாரத்தை ஆளுநருக்கு அளிக்க முடியும்.

இதனால், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் திட்டமிட்டபடி இன்று பதவியேற்பு விழா நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதேவேளை, தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கான மஜிக் எண் 118-ஐ எட்டுவதற்காக, தவெகவுடன் காங்கிரஸ் கட்சி கைகோர்த்துள்ள நிலையில், 60 ஆண்டுகளுக்கு பின்னர் காங்கிரஸ் தமிழக அமைச்சரவையில் இடம்பிடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் அதேவேளை, தமிழகத்தில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி உருவாக இருக்கிறது.

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களில் 10 குறைவாக இருக்கும் சூழலில், திமுக கூட்டணியை முறித்துக் கொண்டு 5 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட காங்கிரஸ் தவெகவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை நேற்று புதன்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

இதேவேளை,ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ், 2 அமைச்சர் பதவிகளை தருமாறு தவெகவிடம் விருப்பம் தெரிவித்து உள்ளது. தம்முடன் கூட்டணி சேரும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு உண்டு என தேர்தல் பிரசார நேரத்தில் விஜய் அறிவித்து இருந்தார். அதன்படி காங்கிரசுக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று தெரிகிறது.

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளதன் மூலம் தமிழகத்தில் முதல்முறையாக கூட்டணி ஆட்சி நடைமுறை உருவாகி உள்ளது. 60 ஆண்டுகளுக்கு பின்னர் காங்கிரஸ் தமிழக அமைச்சரவையில் இடம்பெறுகிறது.

இதேவேளை, தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளித்த நிலையில், தேமுதிக மற்றும் ஐயுஎம்எல் கட்சிகள் விஜய்க்கு ஆதரவளிக்கப் போவதில்லை என அறிவித்துள்ள அதேவேளை,தலா 2 எம்.பிக்களை வைத்துள்ள விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் விஜய்யை ஆதரிக்க மாட்டோம் என இச்செய்தி எழுதப்படும்வரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

அதேவேளையில், “காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவற்றின் ஆதரவை விஜய் தலைமையிலான தவெக கேட்டுள்ளது. எனவே விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய மூன்று கட்சிகளும் தவெகவுக்கு ஆதரவளிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

தவெகவை ஆதரிப்பது குறித்து காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘எந்தவொரு வகுப்புவாத சக்தியையும் இந்தக் கூட்டணியில் சேர்க்காமல் தவெக விலக்கி வைப்பதை அடிப்படையாகக் கொண்டே எங்களது ஆதரவு வழங்கப்படும். இந்தக் கூட்டணி, தற்போதைய அரசாங்கத்தை அமைப்பதற்கு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகள், மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தல்களுக்கும் பொருந்தும்’ எனத் தெளிவாகத் தெரிவித்துள்ளது.

இதன்மூலமாக, பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் சேர்க்க கூடாது என்று நிபந்தனையை காங்கிரஸ் மறைமுகமாக விதித்துள்ளது. மேலும், வரப்போகும் அனைத்து தேர்தல்களிலும் தவெகவுடன்தான் கூட்டணி என்பதையும் காங்கிரஸ் உறுதிப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக திமுக கூட்டணியில் இருந்த பெரிய கட்சியான காங்கிரஸ், அந்தக் கூட்டணியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியுள்ளது.

திமுகவை கைகழுவிய காங்கிரஸ்

கூடாநட்பு என்று கருணாநிதியால் விமர்சிக்கப்பட்ட காங்கிரஸ், இன்று திமுகவை கைகழுவி விட்டு தவெகவுடன் கூட்டணியில் இணைந்தது. அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தல், லோக்சபா தேர்தல் அனைத்திலும் இனி தவெகவுடன் தான் கூட்டணி என்றும் காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

மத்தியில் 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சி நடத்தியது. அதில் அங்கம் வகித்த திமுக மீது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இந்த வழக்கில், ராஜா, கனிமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் மன வருத்தம் அடைந்த கருணாநிதி, ‘கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை புரிந்து பணியாற்றும்படி தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

காங்கிரஸ் உடனான கூட்டணியை மனதில் வைத்து அவர் இவ்வாறு கூறினார். கடைசியில், இலங்கை தமிழர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி, 2013ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகிக்கொள்வதாக திமுக அறிவித்தது. தொடர்ந்து நடந்த 2014 பார்லி தேர்தலில் திமுக, காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டன. அந்த தேர்தலில் இரு கட்சிகளுக்கும் தோல்வியே பரிசாக கிடைத்தது; யாருடனும் கூட்டணி வைக்காத அதிமுக 37 இடங்களை வென்றது.

வேறு வழியில்லாத நிலையில் 2016ம் ஆண்டு தேர்தலில் திமுகவும், காங்கிரசும் மீண்டும் கூட்டணி அமைத்தன. இந்த சிறிது கால இடைவெளி தவிர 22 ஆண்டுகளாக இரு கட்சிகள் இடையே கூட்டணி தொடர்ந்தது. அந்த கூட்டணி, தவெகவுக்கு ஆதரவு என்ற காங்கிரசின் முடிவால் முறிந்துள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button