இலங்கை

இனிவரும் காலங்களில் வழங்கப்படவுள்ள நீதிமன்றத் தீர்ப்புகளில் ஜனாதிபதி தலையீடு;  எந்தவிதமான மிரட்டல்களுக்கும் ராஜபக்‌ஷக்கள் அஞ்சமாட்டார்கள்

இனிவரும் காலங்களில் வழங்கப்படவுள்ள நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து தற்போதைய ஜனாதிபதியினால் முன்கூட்டியே தீர்மானங்களை வெளியிடுவது, நீதிமன்றத்தை அவமதிப்பதோடு நீதிபதிகளின் சுதந்திரத்தில் தலையிடும் செயல் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

ஏயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடமிருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ அறிவித்தல் கடிதமோ அல்லது அறிவித்தலோ கிடைக்கவில்லை.

ஏயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோருக்கு மே மாதம் 12 ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டே சட்டத்தரணி மனோஜ் கமகே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தற்போதைய ஜனாதிபதியினால் இனிவரும் காலங்களில் வழங்கப்படவுள்ள நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து முன்கூட்டியே தீர்மானங்களை வெளியிடுவது, நீதிமன்றத்தை அவமதிப்பதோடு நீதிபதிகளின் சுதந்திரத்தில் தலையிடும் செயல் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு ராஜபக்ஷக்கள் தொடர்பில் மிகுந்த ஆர்வத்துடன் செயற்பட்ட போதிலும், தற்போதைய அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள நிலக்கரி மோசடி, கொள்கலன் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் டொலர் மோசடிகள் போன்ற பாரதூரமான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை ஆரம்பிக்காமை ஒரு பிரச்சினையாகும் என சட்டத்தரணி மனோஜ் கமகே குறிப்பிட்டுள்ளார்.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு ஆட்சியாளர்களின் பணத்தில் அல்லாமல் பொதுமக்களின் வரிப்பணத்திலேயே இயங்குவதாகவும், அரசியல் பழிவாங்கல்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் ஏனைய பாரிய அளவிலான மோசடிகள் குறித்தும் சுயாதீனமான விசாரணைகளை முன்னெடுக்குமாறும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ராஜபக்ஷ தரப்பினர் இவ்வாறான அரசியல் நடவடிக்கைகளுக்கு அஞ்சமாட்டார்கள் என்றும், தேவையான சந்தர்ப்பங்களில் அதற்கு சட்டப்பூர்வமாக பதிலளிப்பார்கள் என்றும் சட்டத்தரணி மனோஜ் கமகே அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button