இலங்கை

ஐந்து பெரும் துயரங்களால் நாடு மிகப் பெரும் ஆபத்தில்!;  எதிர்க்கட்சித் தலைவர் எச்சரிக்கை 

கடந்த ஏழு ஆண்டுகளில் நாடு எதிர்கொண்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முதல் மத்திய கிழக்கு போர் வரையிலான ஐந்து துயரச் சம்பவங்களால், இலங்கை தற்போது மிகவும் பாரதூரமான மற்றும் அபாயகரமான நிலையை எதிர்கொண்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

சந்திமா விஜய குணவர்தனவால் எழுதப்பட்ட நூல் வெளியீட்டு விழா கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் இடம்பெற்ற போது அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், “நாட்டின் உணவுப் பாதுகாப்பு, பொருளாதாரம், சமூகம், அரசியல் இறையாண்மை மற்றும் மக்களின் வாழ்க்கை முறை என அனைத்தும் இன்று பெரும் ஆபத்தில் உள்ளன.

வழக்கமான கோட்பாடுகளுக்குள் முடங்கிக் கிடக்காமல், நிலவும் சவால்களுக்கு நடைமுறை ரீதியிலான தீர்வுகளைத் தேட வேண்டியது அவசியமாகும்.

இலங்கையின் கடலோரங்களில் காணப்படும் எரிவாயு மற்றும் எரிபொருள் வளங்களைப் பல்வேறு தரப்பினரின் அழுத்தங்கள் காரணமாகப் பெற முடியாத நிலை நீடிக்கின்றது.

வெளிநாடுகளைச் சார்ந்திராமல், சொந்த முயற்சியால் நாட்டின் வளங்களைப் பயன்படுத்தித் தன்னிறைவை அடைய வேண்டும்.

உள்நாட்டு காய்கறிகள், பழங்கள் மற்றும் விளைபொருட்களைப் பயன்படுத்தி உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வழிமுறைகளை நோக்கி நகர வேண்டும்.

நாட்டின் கலாசாரம் மற்றும் நாகரிகத்தை வேண்டுமென்றே சீரழித்து, நாட்டுக்குப் பொருந்தாத ஏகாதிபத்தியக் கருத்துகளை நிலைநிறுத்தச் சில குழுக்கள் சூழ்ச்சி செய்து வருகின்றன.

இத்தகைய தீவிர வலதுசாரி மற்றும் நவ தாராளவாதக் கருத்துகளுக்கு அடிமையாகாமல் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

வெளியிடப்பட்டுள்ள இந்த நூல், நாட்டின் கலாச்சார முக்கியத்துவம் மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளுக்குத் தேவையான பதில்களைத் தந்துள்ளது எனத் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button