இலங்கை

இனத்தின் வலியை மறந்ததா கம்பன் கழகம்!; போராட்டக் களத்தில் மக்கள் – அரச தலைவருக்கு விருது

நாட்டில் சிறந்த ஆட்சியை ஏற்படுத்தினாராம், சிறிலங்கா சிங்கப்பூரானதால் மகிழ்ந்த கம்பவாரிதி, சற்று முன் விருது கொடுத்து மகிழ்ந்தார்.

ஒரு இனம் தனது பறிக்கப்பட்ட உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கிறது.

நிலமிழந்த காணி உரிமையாளர்கள் காணிக்காகப் போராடுகின்றனர்.

வடக்கு கிழக்கில் தொல்லியல் திணைக்களத்தின் பெயரால் தமிழர்களின் நிலங்களை அரச கட்டமைப்பும், பாணமுரே திலகவம்ச தேரர், ஜிந்தோட்ட நந்தராம தேரர் மற்றும் கல்கமுவ சந்தாபோதி தேரர் போன்றோரும் பிடிக்கிறார்கள்.

கிழக்கில் கிராமங்கள் தோறும் வனவளத்திணைக்களம் மக்களின் காணிகளில் எல்லைக்கல் நாட்டி உரிமைகோருகிறது.

முத்துநகரில் துறைமுக அதிகாரசபைக் காணியென முத்துநகர் மக்களின் நிலத்தை இந்திய நிறுவனங்களுக்குக் கொடுத்து மக்களை நடுவீதியில் போராட வைத்திருக்கிறது அரசு.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்திற்கு முடிவில்லை.

243 ஐத் தாண்டி செம்மணியில் மனித எச்சங்கள் கிடைக்கப்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

வெடுக்குநாறி மலை, குருந்தூர் மலை மற்றும் தந்தாமலை எனத் தொடர்கிறது மலைகளின் பறிப்பு.

பயங்கரவாதத் தடைச்சட்டம் கண்டபாட்டிற்குப் பாய்கிறது அத்தோடு வருடக்கணக்கில் அரசியல் கைதிகள் சிறையில் வாடுகின்றனர்.

வடக்கு கிழக்கில் நிலம் தொடங்கி கருத்துச் சுதந்திரம் வரை அத்தனையும் பறிக்கப்பட்டு மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

அரசாங்கம் மாறியதைத் தவிர எந்த மாற்றமும் இல்லை என்பதுடன் ராஜபக்சகளின் மெருகூட்டப்பட்ட வடிவமாக ஜே.வி.பி ஆட்சி தொடர்ந்துகொண்டிருக்கிறது.

ஒரு இனம் தனது பறிக்கப்பட்ட உரிமைகளைக் கோரி தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி வீதி வீதியாகப் போராடிக்கொண்டிருக்க அதே இனத்தின் கம்பன் கழகம், ஜே.வி.பி அரசின் தலைவருக்கு நாட்டில் அற்புதமான ஆட்சியை நடத்துவதாகக் கம்பன் விருது கொடுத்துள்ளது.

கம்பன் கழகம் தனது சொந்தச் சலுகைகளுக்காகத் தனது சொந்த இனத்தைக் கருவறுத்தவர்களின் தலைக்கு மாலை சூடி விருது வழங்கித் கொண்டாடுகிறது.

இதை யாருக்கு எடுத்துரைப்பது? யாரை நோவது? கம்பனுக்கு வந்த சோதனை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button