அடுத்த தமிழக முதல்வர் யார்? இன்று விலகும் சஸ்பென்ஸ்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 23-ம் திகதி நடந்து முடிந்தது.
234 தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இந்திரங்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள்..? மக்கள் தீர்ப்பு என்ன..? என்பது தொடர்பாக பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கை (4) நடைபெற உள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப்போட்டி நிலவியது.
இந்த சூழலில், புதிதாக களம் கண்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிக அளவில் வாக்குகளை பிரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் தேர்தல் முடிவுகளை துல்லியமாக கணிப்பதில் சவால்கள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தி.மு.க. மீண்டும் ஆட்சியை பிடித்து வரலாறு படைக்குமா?. அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறுமா?. விஜய் ஆட்சியைப் பிடிப்பாரா? அல்லது எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றத்திற்குள் நுழைவாரா? என்ற கேள்விகளுக்கு நாளை தெளிவான பதில்கள் கிடைத்துவிடும்.
நாளைய தினம் வாக்கு எண்ணும் மையங்கள் மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் காலை முதல் பரபரப்பாக இருக்கும்.
இதையொட்டி தமிழக பொலிஸார் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் மட்டும் 18 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் 40-க்கும் மேற்பட்ட துணை இராணுவ படையினர் துப்பாக்கி ஏந்தியபடி பணியில் உள்ளனர்.
இதற்கிடையில் நாளை தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இதற்கான உத்தரவை தமிழக டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் பிறப்பித்து உள்ளார். அனைத்து ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள், கமிஷனர்கள், மாவட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தங்கள் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
![]()