இலங்கை

சமஷ்டி கட்டமைப்பிலான புதியதோர் அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்;  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வலியுறுத்து

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உழைப்பாளிகள் தின கூட்டத்தில் பத்து பிரகடனங்கள் வெளியிடப்பட்டது.

1. பொருளாதார சிக்கல், டித்வா புயல் மற்றும் மேற்காசிய போர் காரணங்களினால் சர்வதேச சந்தையில் இலங்கை ரூபாவிற்கான பெறுமதி மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் நாளாந்தம் சம்பளம் பெறுவோரின் சம்பளங்கள் கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டும்.

2. விவசாய உரம், எரிபொருள் ஆகியவையின் தட்டுப்பாடு மற்றும் விலைஉயர்வு காரணமாக வருவாய் பாதிக்கப்பட்டிருக்கின்ற சுயதொழிலாளிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

3. நிலக்கரி இறக்குமதி ஊழலினால் அதிகரிக்கும் மின்சார கட்டணத்தின் உயர்வு பாவிப்பாளர்களிடமிருந்து அறவிடாமல் ஊழலுக்கு துணைபோன அரசியல்வாதிகளிடமும், அதிகாரிகளிடமுமிருந்து பெறப்பட வேண்டும்.

4. புதிய அரசாங்கத்திலும் இடம்பெறும் ஊழல் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு மக்களுடைய பணமும் பொதுச்சொத்தும் பாதுகாக்கப்பட வேண்டும்.

5. நீண்ட காலமாக நடாத்தப்படாமல் இருக்கும் மாகாணசபைத் தேர்தல் காலதாமதமின்றி இவ்வருடத்திற்குள்ளே நடாத்தப்பட வேண்டும்.

6. பயங்கரவாத தடுப்புச்சட்டம் முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும்.

7. எஞ்சியிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

8. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதிப் பொறிமுறையொன்று உடனடியாக ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

9. வடக்கிலும் கிழக்கிலும் இராணுவ கட்டுப்பாட்டிற்குள்ளும், தொல்பொருள், வனப்பாதுகாப்பு, மகாவலி ஆகியவற்றினால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

10. தேர்தல் வாக்குறுதிகளின் பிரகாரம் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையினை ஒழித்து அதியுச்ச அதிகாரப்பகிர்வின் அடிப்படையில் சமஸ்டி கட்டமைப்பிலான புதியதோர் அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button