இந்தியா

அடுத்த தமிழக முதலமைச்சர் இவரா? வௌியான கருத்துக்கணிப்பு

234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு கடந்த 23ம் திகதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

தேர்தலில் 85.10 சதவீத வாக்குகள் பதிவானது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 4ம் திகதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தையை கருத்து கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பெரும்பான்மைக்கு 118 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற நிலையில், பல்வேறு நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன.

நான்கு பிரதானக் கட்சிகளும் பெரும்பான்மை பெறாதபட்சத்தில் அது ‘தொங்கு சட்டமன்றம்’-மாக கருதப்படும்.

எனவே, ஆளுநர் மிகப்பெரிய ஒற்றைக் கட்சியின் தலைவரை ஆட்சி அமைக்க அழைக்கலாம்.

அல்லது தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியை அமைத்தவர்களை அழைத்து பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லலாம்.

ஆளுநரால் அழைக்கப்பட்ட முதலமைச்சர், சட்டமன்றத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

அதில் தோல்வியுற்றால் அந்த அரசு கவிழும். எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாத நிலை நீடித்தால், ஆளுநரின் பரிந்துரையின் பேரில் அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமுல்படுத்தப்படலாம்.

பின்னர் 6 மாதங்களுக்குள் மீண்டும் தேர்தல் நடத்தப்படும்.

இந்நிலையில் இன்று வௌியான தேர்தலுக்கு பின்னராக கருத்துக் கணிப்புகளில் தி.மு.கவின் ஆட்சி தொடரும் எனவும் அந்த கூட்டணி 120 தொகுதிகளை கைப்பற்றக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும், CNN, Times Now வௌியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் அ.தி.மு.க 114 – 124 இடங்களை கைப்பற்றி வெற்றி பெறும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் Axis My India வௌியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் விஜய் தலைமையிலான த.வெ.க 98 – 120 இடங்களை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களை ஒன்றாக நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

எவ்வாறாயினும் எதிர்வரும் 4 ஆம் திகதியே இறுதி முடிவு வௌியாகவுள்ளது.

கடந்த ஏப்ரல் 9, ஏப்ரல் 23, ஏப்ரல் 29 என மூன்று திகதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 9ஆம் திகதி தேர்தல் நடந்து முடிந்தது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கடந்த 23ஆம் திகதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது.

இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடக்கும் மேற்குவங்கம் மாநிலத்திற்கு முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 23ஆம் திகதி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *