இலங்கை

மருத்துவக் கண்காணிப்பில் இருக்கும் ரணில் சகாக்களுக்கு வழங்கிய முக்கிய அறிவுறுத்தல்

சத்திர சிகிச்சையின் பின்னர் நாடு திரும்பி மருத்துவக் கண்காணிப்பில் இருக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்துத் தனது நெருக்கமான அரசியல் சகாக்களுடன் முக்கிய ஆலோசனைகளை முன்னெடுத்துள்ளார்.

இந்த வாரம் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடல்களில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னாள் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தனது பதவியில் இருந்து விலகியமைக்கான உண்மைப் பின்னணியை அரசு நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க இதன்போது வலியுறுத்தினார்.

அநுரவுக்கு சரியான திசை..

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிடுமாறு பேராசிரியர் ஜி.எல். பீரிஸுக்கு அவர் பணிப்புரை விடுத்தார். தற்போதைய அரசுக்குச் சரியான திசையைக் காட்ட எத்தனை பேர் ஆலோசனை வழங்குகின்றார்கள் என ரணில் இதன்போது கேள்வி எழுப்பினார்.

இது குறித்து அவர் மேலும் சுட்டிக்காட்டியதாவது, “ஒருபுறம் எரான் விக்கிரமரத்னவை உள்வாங்க முயற்சிகள் நடக்கின்றன, மறுபுறம் ஹர்ஷ டி சில்வாவிடம் ஆலோசனைகள் பெறப்படுகின்றன.

எரான் விக்கிரமரத்னவை இவ்வாறான பதவிகளுக்குக் கொண்டுவருவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்குள்ளேயே கடும் எதிர்ப்பு நிலவுகின்றது. இந்த திரைமறைவுப் பேச்சுகளுக்குப் பின்னால் யார் இருக்கின்றார்கள் என்பது மர்மமாகவே உள்ளது.” – என்றார்.

அரசுக்கு எதிராக எழுந்துள்ள மோசடிக் குற்றச்சாட்டுகளை மூடிமறைக்கப் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று சாடிய அவர், வாக்களித்த மக்களை முட்டாள்களாக்க அரசு முற்படுகின்றது என்றும் தெரிவித்தார்.

எனவே, உண்மை நிலையை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம் என்றும், இதற்கு எதிராகக் கூட்டு எதிர்க்கட்சி வலுவாகச் செயற்பட வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க இதன்போது அறிவுறுத்தினார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *