உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் வழக்கு; மேலதிக சொலிசிட்டர் ஜெனரலுடன் மோதிய இராணுவ உயர் அதிகாரிகள்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு சில இராணுவ அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுவதாக, இந்த வாரம் திறந்த நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்த கருத்தை அடுத்து, இராணுவ உயர் அதிகாரி ஒருவர் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
இராணுவத்தின் சட்டப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் முதலில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலைச் சந்தித்து, ஒரு சிரேஷ்ட அதிகாரி அவருடன் பேச விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
தொலைபேசி ஊடாக இடம்பெற்ற இந்த உரையாடல், ஆரம்பத்தில் சுமூகமாக இருந்தபோதிலும், பின்னர் காரசாரமாக மாறியுள்ளது. நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வெளியிட்ட கருத்துக்கள் இராணுவத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதாக அந்த உயர் அதிகாரி குற்றம் சுமத்தியுள்ளார். தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு இராணுவம் ஆதரவளிக்கவில்லை எனக் கூறுவதை அவர் மறுத்துள்ளார்.
விசாரணைகளுக்கு இராணுவம் ஆதரவு வழங்கி வருவதாக அந்த அதிகாரி வாதிட்ட போதிலும், அதனை மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ஒரு கட்டத்தில், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் இவ்வாறான கருத்துக்களைத் தொடர்ந்து தெரிவித்தால், அவரது நடத்தை குறித்து “ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்ய வேண்டியிருக்கும்” என அந்த இராணுவ அதிகாரி எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.
தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு சட்ட உதவி பெறுவதற்காக இராணுவப் புலனாய்வுப் பிரிவு நிதி வழங்கியதாக திலீப பீரிஸ் குற்றம் சுமத்தியிருந்தார். இது தவறான செயல் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தல்: விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மறுக்கும் நபர்கள் குறித்து நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கவும், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் சட்டமா அதிபர் திணைக்களம் உத்தேசித்துள்ளதாக அவர் அந்த இராணுவ அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவுக்கு, இராணுவ அதிகாரிக்கும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸுக்கும் இடையில் இடம்பெற்ற இந்த உரையாடல் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
![]()