இலங்கை

அர்ச்சுனா கொலை மிரட்டல் விடுத்த பெண்ணுக்குச் சிறை; மல்லாகம் நீதிமன்றம் உத்தரவு 

யாழ்ப்பாணத்தில் அர்ச்சுனா எம்.பியுடன் முரண்பட்ட பெண்ணொருவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ள மல்லாகம் நீதவான் நீதிமன்றம் ,அந்தப் பெண்ணின் குழந்தையை அப்பெண்ணே வைத்திருக்கவும் அனுமதித்துள்ளது.

இளவாலை பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினருக்கும் , மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் காணி பிணக்கு ஒன்று நிலவி வரும் நிலையில், சனிக்கிழமை அந்தக் காணிக்குள் பாராளுமன்ற உறுப்பினருக்கும் மற்றைய தரப்பினரும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் தனது கைத்துப்பாக்கியை காட்டி அவர்களை மிரட்டியமை தொடர்பிலான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இந்தக் காணி எல்லை பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு நடைபெற்று வருகிறது. அந்தவகையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பெண்ணின் உறவினரான இளைஞர் ஒருவரும் அந்த இடத்திற்கு சென்ற நிலையில் அர்ச்சுனா எம்.பி அந்த இளைஞனை எட்டி காலால் உதைத்ததாக அந்த இளைஞரின் உறவினர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் அர்ச்சுனா எம்.பி. தனது கைத்துப்பாக்கியை எடுத்து நீட்டி, ‘உன்னை கொலை செய்வேன்’ என அந்தப் பெண்ணுக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதன்போது, அர்ச்சுனா எம்.பி. யின் சட்டத்தரணி கௌசல்யாவும் அந்த பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவர்களை காணொலியும் பதிவு செய்துள்ளார்.

இவ்வாறான நிலையில் , தனது காணிக்குள் அத்துமீறி நுழைந்து , தன்னை அச்சுறுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் , இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார் .

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பாராளுமன்ற உறுப்பினருடன் முரண்பட்டவர்களில் பெண்ணொருவரை கைது செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தினர்.

இதனை அடுத்து அந்தப் பெண்ணை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது .

இதன்போது குறித்த பெண் ஒரு வயது குழந்தைக்கு தாய் எனவும் , குழந்தைக்கு பாலூட்ட வேண்டிய தேவை உள்ளதாகவும் மன்றுக்கு சுட்டிக்காட்டிய போது , குழந்தையை தாயுடன் இருக்க மன்று அனுமதித்தது.

இருப்பினும்,பொது மக்களுக்கு கைத்துப்பாக்கி காட்டி பகிரங்க கொலை மிரட்டல் விடுத்ததுடன் இளைஞன் ஒருவரைத் தாக்கிய அர்ச்சுனா எம்.பி. மீது இதுவரை பொலிசார் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button