இந்தியா

பஞ்சாபில் ஆட்டம் காணும் ஆம் ஆத்மி!

ஆம் ஆத்மி கட்சித் தலைமையில் நிகழும் தவறுகளே அங்குள்ளோர் வெளியேற காரணமாக இருந்திருக்கலாம் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவாலின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் போன்றவற்றால் அதிருப்தி அடைந்த அக்கட்சியின் முன்னணி இளம் தலைவரும், ராஜ்ய சபா எம்பியுமான ராகவ் சத்தா விலகுவதாக அறிவித்தார். அவருடன் மேலும் 6 எம்பிக்கள் விலகுவதாக அறிவித்துள்ளனர்.

பின்னர், ராகவ் சத்தா, சந்தீப் பதக், அசோக் மிட்டல் ஆகியோர் பாஜவில் ஐக்கியமாகினர். மேலும் 63 எம்எல்ஏக்கள் ராகவ் சத்தா கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிகிறது. விலகல் மற்றும் பாஜவில் இணைவு ஆகியவை ஆம் ஆத்மி கட்சியை அசைத்து பார்க்க ஆரம்பித்துள்ளது. பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியை இழக்கும் நிலைக்கு சென்றுவிட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இந் நிலையில், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே ஆம் ஆத்மியில் நிலவும் குழப்பங்கள் பற்றி கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது;

ஒரு கட்சியை விட்டு விலகி, வேறோரு கட்சியில் சேர்வது சரியல்ல. நமது சுயநல தேவைகளுக்காக கட்சி மாறுவது சரியானது இல்லை.

கட்சிக்குள்ளே நிகழும் பிரச்னைகளே இதற்கு காரணமாக இருக்கலாம். இது கட்சித் தலைமையின் தவறு. சரியான பாதையில் கட்சி சென்றிருந்தால் அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்க மாட்டார்கள்.

கட்சியின் நடவடிக்கைகள் சரியான திசையில் இல்லை. ஏதோ சிக்கல்களை சந்திருப்பதால், அங்குள்ளோர் கட்சியில் இருந்து வெளியேறுகின்றனர். இதனை ஜனநாயகபூர்வமாக ஆராய வேண்டும். இந்த விவகாரத்தில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கருத்து உண்டு. ஜனநாயகத்தில் அனைவருக்கும் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு.

இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.

நாடு முழுவதும் 2011ம் ஆண்டு ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் போது அன்னா ஹசாரேவும், அர்விந்த் கெஜ்ரிவாலும் இணைந்து செயல்பட்டனர். அப்போது நடைபெற்ற பல்வேறு போராட்டங்கள், உண்ணாவிரதங்களில் கெஜ்ரிவாலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *