மட்டு.சிறையில் பிள்ளையானை 3 தடவை சந்தித்த பேராசிரியர்!; இரு பெண்களும் சந்தித்தனர் -நீதிமன்றத்தில் தகவல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை சம்பவம் தொடர்பில் 2015 முதல் 2021 வரை பிள்ளையான் மட்டக்களப்பு சிறையில் வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் நடந்த பல சந்திப்புகள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிள்ளையானுடன் சிறையில் இருந்த ஒருவரின் சாட்சியத்தின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறையினர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத்துறையினர் சமர்ப்பித்துள்ள தகவல்களின் படி, பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், 2015 முதல் 2021 வரை மட்டக்களப்பு சிறைச்சாலையில் பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, பேராசிரியர் ரொஹான் குணரத்ன அவரை 3 சந்தர்ப்பங்களில் நேரில் சந்தித்து பேசியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பிள்ளையானுடன் சிறையில் இருந்த ஒருவரின் சாட்சியத்தின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த சந்திப்புகளின் போது பேராசிரியர் குணரத்னவுடன் இரு பெண்கள் சென்றுள்ளனர்.
அவர்களில் ஒருவர் பின்னர் நேரடியாக இலங்கை இராணுவத்தில் ‘மேஜர் தரத்துக்கு நியமிக்கப்பட்டதாக குற்றப்புலனாய்வுத்துறையினர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர். தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த சஹ்ரான் ஹாஷிமின் சகோதரர் செய்னி மௌலவி மற்றும் மில்ஹான் ஆகியோரை பிள்ளையான் தான் இருந்த சிறை அறைக்கே அழைத்துச் சென்றதாக அந்தச் சாட்சியாளர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் மூவரும் பேசிக்கொண்டிருந்த போது எவராவது அருகில் சென்றால் பேச்சை மாற்றி விடுவார்கள் என்றும் சாட்சியாளரை கோடிட்டு, குற்றப்புலனாய்வுத்துறையினர் நீதிமன்றுக்கு அறிக்கையிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
![]()