இலங்கை

ஜே.வி.பி.யின் கணக்குக்குச் சென்றதா 25 லட்சம் டொலர்?;  இது ஹேக்கர்களின் வேலை இல்லை என்கிறார் கம்மன்பில 

திறைசேரியின் 2.5 மில்லியன்(25 லட்சம்) டொலர் ஹேக்கர்களால் தமது கணக்குகளுக்கு மாற்றியுள்ளதாக கூறப்படுகின்ற போதும், இதனை ஹேக்கர்களின் வேலையாக தெரியவில்லை என்றும், அந்த தொகை பெலவத்தை(ஜே.வி.பி. தலைமையகம்) கணக்கிற்கு மாற்றப்பட்டதா என்ற சந்தேகங்கள் ஏற்படுவதாகவும் பிவித்துறு ஹெல உறுமய தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிவித்துறு ஹெல உறுமய தலைமையகத்தில்  நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரச திறைசேரியினால் வெளிநாட்டு கடன்களை மீளச் செலுத்தும் பொது 2.5 மில்லியன் டொலர்கள் ஊழல்கள் இடம்பெற்றுள்ள சம்பவம் தொடர்பில் எவரும் எழுப்பாத 8 கேள்விகளை எமக்கு எழுப்ப வேண்டியுள்ளது.

அதாவது சகல பல்தரப்பு கடன்கள் தவிர, சகல ஏனைய கடன்களை மீளச் செலுத்துதல் நிறுத்தப்பட்டுள்ள பின்னணியில் அரசாங்கத்தினால் அவுஸ்திரேலியாவின் நிறுவனமொன்றுக்கு மாத்திரம் கடனை மீளச் செலுத்தியது எவ்வாறு? இந்த கடனை மீளச் செலுத்தும் போது மூன்றாம் தரப்பினருக்கு நிதியை பெற்றுக்கொள்ள வாய்ப்பு உள்ளதாக இலங்கை மத்திய வங்கியினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதனை கணக்கில் எடுக்காமல் செயற்பட்டது யார்?

அத்துடன் 2025ஆம் ஆண்டில் இந்தியாவின் நிறுவனமொன்றுக்கு கடன்களை செலுத்தும் போது இதேபோன்று மூன்றாம் தரப்புக்கு நிதி செல்லக்கூடிய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அப்படியென்றால் இந்திய நிறுவனத்திற்கும் கடனை மீளச் செலுத்துவதற்காக அனுமதியை வழங்கியது யார்?

அதேபோன்று இப்போது ஹேக்கர்கள் தொடர்பில் கூறி உண்மைகளை மறைக்க முயற்சித்தாலும் இங்கே ஹெக்கர்களால் கைப்பற்றும் நடவடிக்கை இடம்பெறவில்லை. கடன் செலுத்தும் நிறுவனத்தின் கணக்கிலக்கத்தை மாற்றி வந்த ஈமெயில் தகவலுக்கமைய வேறு இலக்கத்திற்கு பணத்தை அனுப்பியதே நடந்துள்ளது. இதன்படி இடைவழியில் ஹேக்கர்கள் கைப்பற்றி நிதியை பெற்றுக்கொள்ளவில்லை. எங்களாலேயே புதிய கணக்கு இலக்கத்திற்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது. அப்படியென்றால் வங்கி கணக்கு இலக்கத்தை மாற்றுவதற்கு அனுமதி வழங்கியது யார்? அது ஏன் நடந்தது?

இதேவேளை இந்தளவான பெரிய மோசடியை இவ்வளவு காலம் அரசாங்கம் ஏன் மறைத்து வைத்திருந்தது? இது தொடர்பில் கணக்காய்வாளருக்கு அறிவிக்கப்பட்டதா? கணக்காய்வாளருக்கு அறிவிக்க தவறியமைக்காக நிதி அமைச்சின் செயலாளர் பொறுப்பேற்று பதவி விலகுவாரா? இல்லையென்றால் ஏன்?

அத்துடன் நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்திற்குரியது. இவ்வாறான சம்பவம் நடந்த உடனேயே நிதி அமைச்சரினால் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த மோசடியை பாராளுமன்றத்திற்கு அறிவிக்காமல் இருந்தமைக்கான பொறுப்பை ஏற்று நிதி அமைச்சு பதவியில் இருந்து அநுரகுமார விலகுவாரா? இந்த கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்.

இங்கே ஹேக்கர்கள் தொடர்பில் கூறினாலும் கணக்கு இலக்கத்தை மாற்றி வேறு கணக்கிற்கு பணம் அனுப்பப்பட்டமையே நடந்துள்ளது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னர் இது போன்ற சம்பவங்கள் நடந்ததாக பதிவாகவில்லை. இதனால் மாற்றி அனுப்பப்பட்ட கணக்கு பெலவத்தவின் கணக்கா என்ற சந்தேகங்கள் எவருக்கும் ஏற்படுகின்றது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *