உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் அடிமுடிகளை அநுர கண்டுபிடிப்பாரா?

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தில் நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகளுடன் அனைவரும் இருக்கின்றனர் என்று ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
2019 ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று 7 வருடங்கள் நிறைவடைந்ததையிட்டு நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெற்ற நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது ஓமல்பே சோபித தேரர் மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து 7 வருடங்களாகியுள்ள போதும், இன்னும் அதனால் ஏற்பட்ட கண்ணீர் காயவில்லை. தாக்குதல் நடந்த பின்னர் மூன்று ஜனாதிபதிகள் பதவியில் இருந்து சென்றுள்ளதுடன், இப்போது நான்காவது ஜனாதிபதி பதவியில் இருக்கின்றார். மூன்று அரசாங்கங்கள் இருந்துள்ளதுடன், இப்போது நான்காவது அரசாங்கம் இருக்கின்றது. இன்னும் இருள் நீங்கவில்லை. மக்கள் நீதியை கோருகின்றனர்.
இதுபோன்ற பேரழிவு இனியும் நடக்காமல் இருப்பதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை என்னவென்றால் நடந்த சம்பவத்தின் அடிமுடிகளை கண்டறிதல், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்தல் ஆகியவற்றை செய்ய வேண்டும். இந்த அரசாங்கத்திற்கு சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. மக்கள் எதிர்பார்த்துள்ள இந்த பிரச்சினைக்கு சரியா தீர்வை வழங்க வேண்டும். இந்த ஜனாதிபதி மற்றும் இந்த அரசாங்கத்தின் கீழ் இந்த விடயம் நிறைவேறும் என்று நம்புகின்றோம் என்றார்.
![]()