இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; பிள்ளையான் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை!; ஞானசார தேரர் சந்தேகம்

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் வகையில் எவ்வித சான்றுகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை” என்று கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

பிள்ளையான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட விதம் மற்றும் அவருக்கு எதிரான விசாரணைகள் குறித்து ஊடகங்களிடம் இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“பிள்ளையான் கைது செய்யப்பட்ட போது, அவரிடமிருந்து மிக முக்கியமான தகவல்கள் கிடைக்கப் பெற்று வருகின்றன என்று ஜனாதிபதியும் பிரதி அமைச்சரும் தெரிவித்திருந்தனர். ஆனால், ஓராண்டுக்குப் பிறகு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சமர்ப்பித்த ‘பி’ அறிக்கையில், தாக்குதலுக்கும் பிள்ளையானுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக எந்தவொரு விடயமும் குறிப்பிடப்படவில்லை.

மட்டக்களப்புச் சிறையில் இருந்தபோது சஹ்ரான் குழுவினருடன் பிள்ளையான் தொடர்புகளை ஏற்படுத்தினார் என்று அஸாத் மௌலானா முன்வைத்த குற்றச்சாட்டுகள், தற்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ ஆவணங்களில் ஏன் இடம்பெறவில்லை என்றும் தேரர் கேள்வி எழுப்பினார்.

அரசியல் இலாபங்களுக்காகவும் ஒரு தரப்பினரைத் திருப்திப்படுத்தவும் இத்தகைய கருத்துக்கள் திட்டமிட்டுப் பரப்பப்பட்டது என்று சாடிய அவர், அவை உண்மைக்கு அப்பாற்பட்டவை என்பது இப்போது நீதிமன்ற அறிக்கைகள் ஊடாகப் புலனாகத் தொடங்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.

முறையான ஆதாரங்கள் இன்றி ஒருவரைக் குற்றவாளியாகச் சித்தரிப்பது விசாரணைகளின் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்குகின்றது என்றும் ஞானசார தேரர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *