இலங்கை

உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளை மறைக்காது சர்வதேச விசாரணையை நடத்துங்கள்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டறிய சர்வதேசப் பாதுகாப்பு அமைப்புகளின் ஒத்துழைப்புடன் கூடிய வெளிப்படையான விசாரணை அவசியமாகும். அரசாங்கம் மக்களைத் தொடர்ந்து பொய்களால் ஏமாற்றி வருகிறது. இதற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழும் நாள் வெகுதூரத்தில் இல்லை என என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

திஸ்ஸமகாராம பிரதேசத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த மிலேச்சத்தனமான தாக்குதலால் உயிரிழப்புகள், சொத்து அழிவுகள் என நாடு பாரிய வடுக்களைச் சுமந்து நிற்கிறது. கடந்த 7 ஆண்டுகளாக நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் காத்திருக்கின்றனர். இந்தத் தாக்குதலைத் திட்டமிட்ட பிரதான சூத்திரதாரிகள் யார் என்பதை அறிய ஒட்டுமொத்த நாடும் ஆவலாக உள்ளது.

இந்த விசாரணைகளை எக்காரணம் கொண்டும் அரசியல்மயமாக்க வேண்டாம் என அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன். தனிநபர்களையோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தையோ இலக்கு வைத்து இந்த விசாரணையை முன்னெடுக்க முடியாது. உண்மையை வெளிக்கொணர அரசியல் தலையீடுகள் முற்றாக நீக்கப்பட வேண்டும். இதற்காக சர்வதேச புலனாய்வு அமைப்புகளின் உதவியைப் பெற்று, விசாரணைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்.

இந்த அரசாங்கம் ஒரு சமூக ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆட்சிக்கு வந்தது. ஆனால், இன்று அந்த ஒப்பந்தத்தை மீறி பொய்களை மட்டுமே கூறி வருகிறது. மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதாகக் கூறிவிட்டு, தற்போது அதனை அதிகரித்துள்ளனர். இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு முதல் எரிபொருள் விலை வரை அனைத்தும் வெறும் தேர்தல் கால வாக்குறுதிகளாகவே முடிந்துவிட்டன.

உலக சந்தையில் எரிபொருள் விலை குறையும் போது, ஏனைய நாடுகள் மக்களுக்குச் சலுகை வழங்குகின்றன. ஆனால், நமது அரசாங்கம் வரியின் மேல் வரிகளை விதித்து மக்களை நசுக்குகிறது. ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் ஊடகவியலாளர்களைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் ஊடாக அச்சுறுத்தும் நடவடிக்கையை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்.

அரசாங்கம் தனது செல்வாக்கைச் சோதித்துப் பார்க்க விரும்பினால் மாகாண சபைத் தேர்தலை நடத்தட்டும். மக்களின் வரிப்பணத்தில் மோசடி செய்து, பொய்களால் ஆட்சியை நடத்தும் இந்த அரசாங்கத்திற்கு எதிராக 220 இலட்சம் மக்களும் விரைவில் வீதியில் இறங்கிப் போராடும் சூழல் உருவாகும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *