அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஈரான் மறுப்பு

ஈரான் தற்போது அமெரிக்காவுடன் புதிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் திட்டத்தில் இல்லை என்று அந்நாட்டு அரசு ஊடகம் ஞாயிற்றுக்கிழமை மாலை தெரிவித்தது.
இதற்கிடையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பலவீனமான போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறிவிட்டதாக ஈரானிய ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது பேச்சுவார்த்தைக் குழுவை இஸ்லாமாபாத்திற்கு அனுப்புவதாக அறிவித்த சில மணிநேரங்களிலேயே இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
ஹார்முஸ் நீரிணை அருகே அமெரிக்கா விதித்துள்ள தடையை மீறிச் செல்ல முயன்ற ஈரானிய சரக்குக் கப்பல் ஒன்று பிடிபட்டதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். “அவர்களது கப்பல் தற்போது எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது, அதில் என்ன இருக்கிறது என்பதை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்!” என்று ட்ரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தக் கப்பல் சீனாவிலிருந்து வந்துகொண்டிருந்ததாக ஈரானிய ராணுவம் தெரிவித்துள்ளது. “அமெரிக்க ராணுவத்தின் இந்த ஆயுதமேந்திய கடற்கொள்ளைக்கு எதிராக ஈரானிய இஸ்லாமிய குடியரசின் ஆயுதப் படைகள் விரைவில் பதிலடி கொடுக்கும்” என்று ஈரானிய ராணுவ செய்தித் தொடர்பாளர் எச்சரித்துள்ளதாக அரசு ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த இந்தச் சம்பவம், பாகிஸ்தானில் பேச்சுவார்த்தையாளர்கள் கூடும் முன்பே போர்நிறுத்தம் தோல்வியடைவதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், நேற்று திங்கள்கிழமை பாகிஸ்தானுக்கு ஒரு குழுவை அனுப்புவதாக அமெரிக்கா கூறியிருந்தது. ஆனால், “அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் திட்டம் தற்போது இல்லை” என்ற ஈரானிய அரசு ஊடகத்தின் கருத்து, பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே அதை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ட்ரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் தலைமையிலான குழு இஸ்லாமாபாத் செல்லவிருந்தது. சனிக்கிழமையன்று, ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. தனது கடற்படைத் தடையை நீக்க அமெரிக்கா மறுத்ததால், சில மணிநேரங்களுக்கு முன்பு எட்டப்பட்ட ஒப்பந்தத்தை ஈரான் ரத்து செய்தது.
வாஷிங்டனின் அதிகப்படியான கோரிக்கைகள், யதார்த்தமற்ற எதிர்பார்ப்புகள், அடிக்கடி மாறும் நிலைப்பாடுகள் மற்றும் தொடரும் கடற்படைத் தடை ஆகியவற்றின் காரணமாகவே இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லை என்று ஈரான் செய்தி நிறுவனம் (IRNA) தெரிவித்துள்ளது.
எட்டாவது வாரமாக நீடிக்கும் இந்தப் போரில், ஈரான் மற்றும் லெபனானில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் உலகளவில் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் காலிபாஃப் கூறுகையில், தூதரக ரீதியாகப் பின்வாங்கப் போவதில்லை என்று குறிப்பிட்டார், இருப்பினும் இரு தரப்புக்கும் இடையே பெரும் கருத்து வேறுபாடு இருப்பதை ஒப்புக்கொண்டார்.
நாளை புதன்கிழமையுடன் போர்நிறுத்தம் முடிவடைய உள்ள நிலையில், இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையே ஈரானுக்குக் கிடைக்கும் “கடைசி வாய்ப்பு” என்று ட்ரம்ப் கூறினார். “ஈரான் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், அந்த நாடே தரைமட்டமாக்கப்படும் ” என்று அவர் ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்திடம் தெரிவித்தார். ஈரான் ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்களை அமெரிக்கா குறிவைத்து அழிக்கும் என்றும் அவர் மீண்டும் எச்சரித்தார்.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தரப்பில், துணைப் பிரதமர் முகமது இஷாக் தார் மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி ஆகியோர் அமைதியை நிலைநாட்டத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம் என விவாதித்துள்ளனர்.
![]()