இலங்கை

அமைச்சர் வீட்டுக்கு… ஆணைக்குழு விசாரணைக்கு: அதிர வைக்கும் நிலக்கரிப் பின்னணி!

இலங்கையில் நிலக்கரி மூலமான மின் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இதுவரையான காலப்பகுதியில், நிலக்கரி இறக்குமதி மற்றும் மின் உற்பத்தியில் இடம்பெற்ற சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க  (17) நியமித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், 2025/26 பருவகாலத்திற்கான நிலக்கரி இறக்குமதி ஒப்பந்தம் புதிய நிறுவனமொன்றிடம் கையளிக்கப்பட்டிருந்தது. எனினும், டெண்டர் விதிமுறைகளை மாற்றி தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கடந்த ஜனவரி மாதம் குற்றம் சுமத்தின. இதன் மூலம் சுமார் 8,497 மில்லியன் ரூபாய் நேரடி நட்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இது தொடர்பான தணிக்கை அறிக்கை ஏப்ரல் 07ஆம் திகதி வெளியிடப்பட்டது. குறித்த அறிக்கையில், நிலக்கரியை ஏற்றிய துறைமுகத்தில் சோதனை செய்த ஆய்வகத்தின் உரிமம் இரத்து செய்யப்பட்டிருந்தமை மற்றும் டெண்டர் கோரப்பட்ட திகதியில் குறித்த நிறுவனம் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை போன்ற பல சர்ச்சைக்குரிய விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.

இந்தச் சூழலில், எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியை பதவியிலிருந்து நீக்குமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய போதிலும், அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அரசாங்கம் தோற்கடித்தது. எனினும், 2009ஆம் ஆண்டு முதல் இடம்பெற்ற அனைத்து நிலக்கரி இறக்குமதிகளையும் விசாரிக்க ஆணைக்குழு நியமிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்தது.

அதற்கமைய, இன்று நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவராக உயர் நீதிமன்ற நீதியரசர் கிஹான் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஆதித்ய படபெந்திகே மற்றும் மேல் நீதிமன்ற நீதியரசர் சஞ்சீவ சோமரத்ன ஆகியோர் இதன் ஏனைய உறுப்பினர்களாவர்.

இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்ட சில மணிநேரங்களில், எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் தமது பதவிகளிலிருந்து விலகியுள்ளனர். இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் பக்கச்சார்பின்றி மற்றும் சுதந்திரமாக இடம்பெறுவதற்கு இடமளிக்கும் வகையிலேயே இவர்கள் பதவிகளிலிருந்து விலகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *