உலகம்

ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை

ஈரான் ஒரு உடன்பாட்டிற்கு வர மறுத்தால், அமெரிக்கப் படைகள் மீண்டும் போரைத் தொடங்கத் தயாராக இருப்பதாக பீட் ஹெக்செத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் ஒரு ஒப்பந்தத்திற்கு உடன்படாவிட்டால், ‘உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி வசதிகள் மீதான தாக்குதல்கள் மீளவும் தொடங்குமென அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் பென்டகனில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

“ஈரான், ஒரு வளமான எதிர்காலத்தையும், ஒரு ‘பொன் பாலத்தையும்’ தேர்ந்தெடுக்கலாம். ஈரான் மக்களின் நலனுக்காக அவ்வாறு செய்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

“ஆனால் ஈரான் தவறான முடிவுகளை எடுத்தால், அது முற்றுகைகளையும், உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி வசதிகள் மீதான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும்,” என்று ஹெக்செத் மேலும் கூறினார்.

மேலும், ஹார்முஸ் நீரிணையில் உள்ள ஈரானிய துறைமுகங்களுக்குள், தேசியம் பாராமல் அனைத்துக் கப்பல்களும் நுழைவதையோ அல்லது வெளியேறுவதையோ அமெரிக்கா முடிந்தவரை தடுக்கும் என்றும் அவர் கூறினார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தொடுத்துள்ள போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக வார இறுதியில் இஸ்லாமாபாத்தில் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தது.

இந்நிலையில், சமாதான ஒப்பந்தத்திற்கான அமெரிக்காவின் நிபந்தனைகளை ஈரான் ஏற்க வேண்டும் என கட்டாயப்படுத்தும் முயற்சியாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானிய துறைமுகங்களுக்குக் கடற்படை முற்றுகையிட உத்தரவிட்டார்.

இதற்கிடையில், பாகிஸ்தான் இராணுவத் தலைமைத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃபை வியாழக்கிழமை சந்தித்தார் என்று ஈரான் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், அவர்களின் சந்திப்பு குறித்து வேறு எந்தத் தகவலும் வெளியாகவில்லை. கடந்த வார இறுதியில் இஸ்லாமாபாத்தில் நடந்த பேச்சுவார்த்தைகள் எந்த முன்னேற்றமும் இன்றி முடிவடைந்தது.

இந்நிலையில், இருநாடுகளுக்கும் இடையே இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்த பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறது.

பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குமா என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இருப்பினும், மேலதிகப் பேச்சுவார்த்தைகள் இஸ்லாமாபாத்தில் நடைபெற வாய்ப்புள்ளது என வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லெவிட் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *