உலகம்

அமெரிக்காவின் அச்சுறுத்தலை மீறி ஹோர்முஸ் நீரிணையை கடந்த 60 கப்பல்கள்!

ஈரான் – அமெரிக்கா கடந்த செவ்வாய் கிழமை மாலை போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதிலிருந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாகக் குறைந்தது 60 கப்பல்கள் கடந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் மீதான கடல்சார் முற்றுகையை (Blockade) அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், அதனையும் மீறி ஈரானியக் கொடியுடன் கூடிய மூன்று கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து அரபிக் கடலுக்குள் நுழைந்துள்ளதாக ‘மரைன் ட்ரஃபிக்’ (MarineTraffic) தரவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க மத்திய கட்டளையகம் (US Central Command) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த முற்றுகையானது  (13) மத்திய அமெரிக்க நேரப்படி காலை 10 மணிக்கு (ஜிஎம்டி 14:00) தொடங்கும்.

ஈரானியத் துறைமுகங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் அனைத்து கடல்சார் போக்குவரத்திற்கும் எதிராக இந்தத் தடை அமுல்படுத்தப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த அதிரடி முடிவு குறித்து பிபிசி (BBC) ஊடகத்திடம் கருத்து தெரிவித்துள்ள மூன்று சட்ட வல்லுநர்கள், இத்தகைய முற்றுகையானது சர்வதேச கடல்சார் சட்டங்களை மீறும் செயலாக அமையக்கூடும் என எச்சரித்துள்ளனர்.

இராணுவ ரீதியாக அமுல்படுத்தப்படும் இந்த முற்றுகை, தற்போது நடைமுறையில் உள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக அமையாதா? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த செவ்வாய் கிழமை மாலை போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதிலிருந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாகக் குறைந்தது 60 கப்பல்கள் கடந்துள்ளன.

இது ஒரு நாளைக்கு சராசரியாக 10 கப்பல்கள் என்ற அளவில் உள்ளது. போர்நிறுத்தத்திற்கு முந்தைய காலத்தை விட இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும்.

அதேவேளை போர் தொடங்குவதற்கு முன்னதாக, நாளொன்றுக்கு சுமார் 138 கப்பல்கள் இந்த நீரிணை வழியாகப் பயணித்ததாகக் கூட்டு கடல்சார் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள சூழலில், அமெரிக்காவின் இந்த முற்றுகை அறிவிப்பு வளைகுடா பிராந்தியத்தில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *